Tuesday, June 18, 2013
இலங்கை::தொட்டதற்கெல்லாம் இந்தியாவிடம் ஓடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கொழும்பில் தான் வாழ வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது. இது அமைச்சர் ரவூப் ஹக்கீம் குழுவினருக்கும் பொருந்தும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
இலங்கை - இந்திய ஒப்பந்தம் காலாவதியாகி பல வருடங்களாகி விட்டது. இனி அது குறித்து எவ்விதமான பேச்சுக்கும் இடமில்லை
சம்பந்தன் குழுவினருக்கும் பிரிவினைவாத கொள்கைகளைக் கொண்ட 13 ஆவது திருத்தத்தை ஆதரிப்பவர்களுக்கும் இரண்டு வழிகள் மாத்திரமே காணப்படுகின்றன. ஒன்று முள்ளிவாய்க்கால் அழிவுப் பாதை, இரண்டாவது ஏ-9 சமாதான பாதை. இதில் எதனை அவர்கள் தெரிவு செய்தாலும் எமக்கு பிரச்சினையில்லை வடக்கை துண்டாட ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. தமிழீழக் கனவை இல்லதொழிக்க அனைத்து வகையிலும் போராடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் சம்பிக ரணவக மேற்கண்டவாறு தெரிவித்தார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன 66 ஆயிரம் பேரை பலியெடுத்தே இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கைசாத்திட்டார். இது முழு அளவில் இலங்கையின் சட்டம் மற்றும் மக்கள் ஆணையை மீறி மேற்கொள்ளப்பட்ட விடயமாகும். எனவே தான் இந்த ஒப்பந்தத்தின் ஆயுட் காலம் 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9ஆம் திகதியன்று யாழ். பல்கலைக்கத்திலிருந்து ஆரம்பமான புலிகளின் தாக்குதல் மூலம் முடிவடைந்து விட்டது.
மீண்டும் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தைப் பற்றி பேசுவது முறையல்ல.
அதே போன்று அந்த ஒப்பந்தத்தின் ஊடாக தேசிய அரசியலில் கலந்துள்ள 13 ஆவது திருத்த சட்டத்தையும் ரத்துச் செய்ய வேண்டும். குறிப்பாக எதிர்வரும் வட மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் இத்திருத்தங்கள் இடம்பெற வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். அதற்காக ஜாதிக ஹெல உறுமய இந்நாட்டு மக்களுடன் ஒன்றிணைந்து போராடும். பாராளுமன்றத்தில் முறையான வகையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்க தனிநபர் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளோம்.
அதேபோன்று ஏனைய தரப்புக்களையும் சந்தித்து வலியுறுத்தி வருகின்றோம். வட மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் 13 ஆவது திருத்தச்சட்டம் திருத்தப்பட வேண்டும். அல்லது முழு அளவில் ரத்துச் செய்யப்பட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறுகின்ற 17 ஆவது திருத்தச் சட்டமோ ஆளுநர் பதவி நீக்கமோ அல்லது சர்வதேச கண்காணிப்பாளர்களோ முக்கியமான விடயங்களில் மனச்சாட்சியின்றி இடதுசாரிகளும் செயற்படுகின்றமை வேதனையளிக்கின்றது.
கடந்த காலங்களில் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு விட்டு தற்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்து இவர்கள் செயற்படுகின்றனர். மறுபுறம் புலிகளின் அழிவிற்கு முன்னராவது சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் திருந்தி செயற்படுவார்கள் என்று நினைத்தோம். ஆனால் இவர்கள் தமிழீழ கனவில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை. பிரச்சினைகளை இலங்கை அரசாங்கத்திற்கு கூறி தீர்வை பெற்றுக் கொள்ளாமல் இந்தியாவிடம் ஓடிச் சென்று நியாயம் கேட்கின்றனர்.
இந்தியாவினால் இலங்கையின் உள்ளக பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியாது. ஆகவே சம்பந்தன் குழுவினர் இந்தியாவிடம் கூறினாலும் கொழும்பில் தான் வாழ வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது அவர்களுக்கு இரண்டு வழிகள் மாத்திரமே காணப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி நடைபெற்ற முள்ளிவாய்க்கால் அழிவா அல்லது வடக்கையும் தெற்கையும் இணைத்த ஏ-9 சமாதான பாதையா? என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். இது ஹக்கீம் குழுவிற்கும் பொதுவானது. எமக்கு இரண்டு வழிகளும் பெரிய விடயங்களில்
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தென்னிலங்கை மக்கள் மறந்து விடவில்லை. 1994 ஆம் ஆண்டு தொடக்கம் 2001 ஆம் ஆண்டு காலம் வரையான சாப காலத்தையும் மறந்து விடவில்லை. நாட்டை புலி பயங்கரவாதிகளுக்கு அடகு வைக்கும் நிலைக்கு பிரிவினைவாத சக்திகள் செயற்பட்டு வருகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய இலங்கையை ஒரு போதும் விரும்பாது. தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாநாட்டில் சம்பந்தன் மிக தெளிவாக இதனை கூறினார்.
தமிழீழம் மலரும் என்று அவர் கூறியுள்ளார். எனவே வடக்கு தேர்தல் ஊடாக இலங்கையின் ஐக்கியத்திற்கு சவால் ஏற்படுமென்றால் அதற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்றார்.சம்பிக ரணவக்க.

No comments:
Post a Comment