Tuesday, June 18, 2013
திருச்சி::சென்னை விமான நிலையத்திலிருந்து, இலங்கையை சேர்ந்த லண்டன் தம்பதியர் கடத்தப்பட்ட
விவகாரத்தில், அமெரிக்க டாலரை மாற்றியது தொடர்பாக, திருச்சி கடைக்காரரிடம் விசாரணை
நடந்தது.
லண்டன் நகரைச் சேர்ந்த தவராஜா-ஜலஜா தம்பதியர், கடந்த மாதம், 29ம் தேதி சென்னை
வந்த போது விமான நிலையத்திலிருந்து மர்மகும்பலால் கடத்தப்பட்டனர். இது தொடர்பாக
அண்ணாநகர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்படி, நடவடிக்கை எடுத்த
போலீஸார், கடந்த, 1ம் தேதி கடலூர் மாவட்டம், மந்தாரகுப்பத்திலிருந்து
மீட்கப்பட்டனர்.
அவர்களைக் கடத்தி, பணம் கேட்டு மிரட்டல் விடுத்த திருச்சியைச்
சேர்ந்த கண்ணன் என்ற தர்மலிங்கம், வசந்த், இளங்கோ மந்தாரகுப்பத்தைச் சேர்ந்த,
சதீஷ்குமார், பிரபு, சரவணன், மதியழகன், இந்திரா அந்தோணிமேரி உள்ளிட்டோர் கைது
செய்யப்பட்டனர். லண்டன் தம்பதியரை கடத்தியதுக்கு மூளையாக செயல்பட்ட கண்ணன் என்கிற
தர்மலிங்கம், அந்த தம்பதியிடமிருந்து பறித்த அமெரிக்க டாலர் நோட்டுக்களை, திருச்சி
ஜங்ஷன் அருகேயுள்ள கடை ஒன்றில், இந்திய ரூபாயாக மாற்றியது தெரியவந்தது.
இதையடுத்து
சென்னை அண்ணாநகர் போலீஸார், நேற்று முன்தினம் மாலை திருச்சி வந்தனர். அவர்கள்
ராக்கின்ஸ் ரோட்டில் உள்ள, வெளிநாட்டு பணம் மாற்றும் கடையான, அமெரிக்கன் மல்டி
மார்ட் உரிமையாளரை பிடித்து விசாரணை நடத்தினர். பின் அவரை விசாரணைக்கு சென்னை
அழைத்துச் செல்வதாகக் கூறி, போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். ஆனால்,
விசாரணையில் அவருக்கும், கடத்தல் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்று
தெரியவந்ததால், அவரை திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் இறங்கிவிட்டு, சென்னை
போலீஸார் சென்று விட்டனர்.

No comments:
Post a Comment