Wednesday, June 26, 2013
இலங்கை::கொழும்பு மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிக் கைதிகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை சந்திக்க முயற்சித்துள்ளனர். சிறையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது மீட்கப்பட்ட செய்மதி தொலைபேசிகளின் ஊடாக இந்தத் திட்டம் அம்பலமாகியுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யும் நவனீதம்பிள்ளையை, மகசீன் சிறைக்கு அழைத்து சந்திப்பதற்கு கைதிகள் முயற்சித்துள்ளனர். புலம்பெயர் புலி ஆதரவு அமைப்புக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறையிலிருந்து 18 செய்மதித்தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. புதிய மகசீன் சிறையில் 300 புலிக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நவனீதம்பிள்ளையின் அழுத்தங்களின் ஊடாக விடுதலையாகும் நோக்கில் இவ்வாறு முயற்சித்துள்ளனர்...
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கை செல்ல உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை, இறுதிக்கட்ட போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கல் பிரதேசத்திற்கு நேரடியாக சென்று நிலைமைகளை ஆராயவுள்ளதாக கூறப்படுகிறது.
நவநீதம் பிள்ளை தனது இலங்கைக்கான பயணத்தை பல முறை ஒத்திவைத்தார். இந்த நிலையில், அவர் ஆகஸ்ட் 25 ஆம் திகதி இலங்கை செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் தனது இலங்கை விஜயத்தின் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
அத்துடன் ஆகஸ்ட் 27 ஆம் திகதி வடக்கு மாகாணத்திற்கு செல்லும் அவர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு அவர், பொதுமக்களையும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளார்.


No comments:
Post a Comment