Wednesday, June 19, 2013

வட மாகாணத்தில் அனைத்து இன மக்களும் வாழக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்: பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ!

Wednesday, June 19, 2013
இலங்கை::வட மாகாணத்தில் அனைத்து இன மக்களும் வாழக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் அனைத்து இனங்களுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்த தாமதமின்றி வடக்கில் அனைத்து இன மக்களும் வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
 
யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா உள்ளிட்ட வட மாகாணத்தின் மாவட்டங்களில் சிங்கள மக்கள் காணி கொள்வனவு செய்யும் உரிமையை ஒடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிங்கள முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் கடமையாற்ற அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலைமை குறித்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை பிரச்சாரம் செய்து வரும் தரப்பினர் இன நல்லிணக்கம் பற்றியும் கவனம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஏனைய இனத்தவர்கள் வடக்கிற்கு செல்ல முடியாத நிலைமை தொடரும் வரையில் பிரிவினைவாதத்தை ஒழிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பெரும் எண்ணிக்கையிலான வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இதேபோன்று ஏனையவர்களும் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
நாட்டின் எந்தவொரு பிரதேசமும் தனியொரு இனத்திற்கான பிரத்தியேக இடமாக இருக்கக் கூடாது என கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment