Friday, June 21, 2013
இலங்கை::சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தகவல்களை உள்ளடக்கிய தேசிய அடையாள அட்டைகளை புதிதாக வெளியிட தேவையான நடவடிக்கையை ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் தற்போது மேற்கொண்டு வருவதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சவீந்திர பெர்ணான்டோ உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இலத்திரனியல் அடையாள அட்டையாக வெளியிடப்பட உள்ள அந்த அடையாள அட்டை எப்படி தயாரிக்கப்பட வேண்டும் என்பது கறித்து தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் நிறைவடைய மேலும் காலம் செல்லலாம் என தெரிவித்து பிரதி சொலிசிட்டர் ஜெனரல், முன்னேற்றங்கள் ஏற்பட்டால் அது குறித்து உடனடியாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து மூன்று மொழிகளில் அடையாள அட்டைகளை வெளியிடுவதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. தற்போது சிங்கள மொழியில் மாத்திரம் வெளியிடப்படும் தேசிய அடையாள அட்டைகளை மூன்று மொழிகளில் வெளியிட வேண்டும் என மகரகம கொடிகமுவ பிரதேசத்தை சேர்ந்த பிரசாத் தனஞ்சய குருகே என்பவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே சவீந்திர பெர்ணான்டோ இதனை கூறியுள்ளார்.
சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுவதால், தமிழ் மொழியில் பணிகள் மேற்கொள்ளப்படும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சென்று ஏதேனும் பணிகளை மேற்கொள்வதில் மக்களுக்கு சிரமங்கள் ஏற்படுவதாக மனுதார் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

No comments:
Post a Comment