Saturday, June 22, 2013
இலங்கை::அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு அரச தரப்பு பிரதிநிதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
சபை முதல்வரும், அமைச்சருமான நிமல் சிரிபால டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அரச தரப்பு பிரதிநிதிகள் குழுவில் 19 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு கூடியது. இதன் போது பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் அரச தரப்பு பிரதிநிதிகளின் நியமனம் தொடர்பில் சபைக்கு அறிவித்த சபாநாயகர் மேலும் குறிப்பிடுகையில் :-
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்காக பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதன் முதற் கட்ட நடவடிக்கையாக இக்குழுவில் அங்கம் வகிக்கும் வகையில் அரச தரப்பு பிரதிநிதிகளாக 19 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவைத் தலைவராகக் கொண்ட இந்தக் குழுவில் அமைச்சர்களான பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், மைத்திரிபால சிறிசேன, டபிள்யூ. டி. ஜே. செனவிரட்ன, அநுர பிரியதர்ஷன யாப்பா, டி. யு. குணசேகர, தினேஷ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேமஜயந்த, ஏ. எல். எம். அதாவுல்லா, ரிஷாட் பதியுத்தீன், சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, பஷில் ராஜபக்ஷ, லக்ஷ்மன் செனவிரத்ன, வாசுதேவ நாணயக்கார, பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான டொக்டர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே, ஜானக பண்டார ஆகிய 19 உறுப்பினர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
இந்த தெரிவுக் குழுவிற்கான எதிர்க் கட்சி உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் தொடர்பில் இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அவை கிடைக்கப்பெற்ற பின்னர் சபைக்கு அறிவிக்கப்படும் என்றார்.
சபாநாயகரின் மேற்படி அறிவிப்பை அடுத்து எதிர்க் கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க கருத்து தெரிவிக்கையில் :-
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்து கொள்வது தொடர் பில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக் கிரமசிங்க பல நிபந்தனைகளை முன் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளதாகவும் அந்தக் கடிதத்திற்கு பதில் கிடைத்த பின்னரே தமது முடிவு அறிவிக்கப்படும் என்றும் எதிர்க் கட்சி யின் பிரதம கொறடாவும் எம்.பியுமான ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

No comments:
Post a Comment