Saturday, June 22, 2013

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய தங்கபாலு யோசனை!

Saturday, June 22, 2013
சேலம்::தேர்தல்களில் தொடர்ந்து தனித்துப் போட்டியிடுவதன் மூலம் எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியும் என்று அந்த கட்சியின் மாநில முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு தெரிவித்தார். சேலத்தில் நடைபெற்ற மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் மேலும் பேசியதாவது, 
காங்கிரஸ் துணை தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றதை தொடர்ந்து கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் அனைத்து அமைப்புகளையும் செயல்பட வைப்பதற்காக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு வீதியில் இறங்கி போராட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் நல்ல எதிர்கட்சியாக திகழும்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பலமிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சொந்தக் காலில் நிற்பதன் மூலம் நாம் பலமிக்கவர்களாக மாற முடியும். ஒவ்வொரு தேர்தலின் போதும் கூட்டணி கட்சிகளுக்காக தொகுதிகளை விட்டு கொடுப்பது நடைபெற்று வருகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து சொந்த பலத்தில் போட்டியிட்டதாலேயே இப்போது ஆட்சியை கைப்பற்ற முடிந்தது. அதே போல தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டால் எதிர்காலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.

சேலம் தொகுதிக்கு கடந்த 2004 முதல் 2009 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 8 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்துள்ளது காங்கிரஸ். இது போன்று தமிழகத்துக்கு பல ஆயிரம் கோடி நிதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டுள்ள எண்ணற்ற சாதனைகளை மக்களுக்கு விளக்கினால் வரும் மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்பார் என்றார்.

No comments:

Post a Comment