Thursday, June 20, 2013
இலங்கை::புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களை தடை செய்யுமாறு இலங்கை அரசாங்கம் அவுஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று தற்போது அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ளது.
அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் மற்றும் வெளிவிவகார அமைச்சர் பொப் கார் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பின் போது, இலங்கைப் பிரதிநிதிகள் இதனைக் கோரியுள்ளனர். அவுஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு சில புலி ஆதரவு அமைப்புக்கள் இயங்கி வருவதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அறக்கட்டளைகைள, சமூக அமைப்புக்கள் என்ற போர்வையில் இயங்கி வரும் இவ்வாறான நிறுவனங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதாக பிரதமர் கில்லார்ட் அறிவித்துள்ளார்.
நிகழ்வை வெற்றிகரமாக்குவதற்கு தேவையான சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை எவ்வாறு வெற்றிகரமாக நடாத்துவது என்பது தொடர்பிலான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இரண்டு சிரேஸ்ட அதிகாரிகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment