Monday, June 03, 2013
சென்னை::இலங்கைக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட் போட்டியில் 334 ரன்கள் இலக்கை அடைந்து இந்திய அணி வெற்றியை கைப்பற்றியது. கோலி, தினேஷ் கார்த்திக் ஜோடி சதம் அடித்து அசத்தினர்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 6 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற இருக்கிறது. டாப்-8 அணிகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் விளையாடுகிறது. இதில் முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை பர்மிங்காம் நகரில் நேற்று சந்தித்தது. பயிற்சி ஆட்டத்தை பொறுத்தவரை இரண்டு அணியும் தலா 15 வீரர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்..
இலங்கை அணியுடனான சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில், இந்திய அணிக்கு 334 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பர்மிங்காம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில்
நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. இலங்கை தொடக்க வீரர்களாக குசால் பெரேரா, திலகரத்னே தில்ஷன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாட, இலங்கை ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இவர்களைப் பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர்.
இர்பான், புவனேஷ்வர், இஷாந்த், வினய் குமார் என நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் இருந்தும், வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தில் விக்கெட் வீழ்த்த முடியாமல் ஏமாற்றம் அளித்தனர். அபாரமாக விளையாடிய குசால், தில்ஷன் இருவரும் அடுத்தடுத்து அரை சதம் கடந்தனர். இருவருமே சதத்தை நோக்கி முன்னேறிய நிலையில் குசால் 82 ரன் (94 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்), தில்ஷன் 84 ரன் (78 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து, மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஓய்வு பெற்று பெவிலியன் திரும்பினர். இந்த ஜோடி ஆட்டமிழக்காமல் 160 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
அனுபவ வீரர் மகிளா ஜெயவர்தனே 30 ரன் எடுத்து இஷாந்த் வேகத்தில் பதான் வசம் பிடிபட்டார். சங்கக்கரா , சண்டிமால் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்தது. சங்கக்கரா 45 ரன் எடுத்து (32 பந்து, 7 பவுண்டரி) அமித் சுழலில் அஷ்வினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சண்டிமால் 46 ரன் எடுத்து (48 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) புவனேஷ்வர் வேகத்தில் விக்கெட் கீப்பர் டோனி வசம் பிடிபட்டார். இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 333 ரன் குவித்தது. திசாரா பெரேரா 26 ரன், லோகுஹெட்டிகே 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய பந்துவீச்சில் புவனேஷ்வர், இஷாந்த், அமித் மிஷ்ரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 334 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அதிரடி வீரர்கள் ஷிகார் தவான், முரளி விஜய் இருவரும் துரத்தலை தொடங்கினர். தவான் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேற, இந்திய அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து விஜய்யுடன் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்தனர். நிதானமாக விளையாடிய விஜய் 18 ரன் எடுத்து எரங்கா பந்துவீச்சில் திரிமன்னே வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ரோகித் ஷர்மாவும் 5 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்ப, இந்திய அணி 62 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில் கோஹ்லி , ரெய்னா ஜோடி ஓரளவுக்கு தாக்குப்பிடித்து ரன் குவித்தது.
இந்தியா 18.5 ஓவரில் 100 ரன்னை எட்டியது. ரெய்னா 34 ரன் எடுத்து சேனநாயகே பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். அடுத்து கோஹ்லியுடன் தினேஷ் கார்த்திக் இணைந்தார். நம்பிக்கையுடன் போராடிய இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டு நம்பிக்கை அளித்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இலங்கை பந்துவீச்சாளர்கள் திணறினர். கோஹ்லியை தொடர்ந்து கார்த்திக்கும் அரை சதம் அடித்து அசத்தினார். இந்தியா 35 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்திருந்தது. கோஹ்லி 86 ரன் (88 பந்து, 6 பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 55 ரன்னுடன் (46 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

No comments:
Post a Comment