Thursday, June 27, 2013
சென்னை::தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (26.6.2013) தலைமைச் செயலகத்தில், 2012-2013ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 201 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
தமிழகத்தில் அனைத்து மாணவ மாணவியரும் கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும், கல்வி கற்பதற்கு வறுமை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற உயரிய நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கட்டணமில்லா கல்வி, சத்துணவு, பேருந்து பயண அட்டைகள், மிதி வண்டிகள், சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினி, கல்வி உபகரண பொருட்கள், காலணிகள், இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத் தொகைகள் போன்ற பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசு ரொக்க பரிசுகள் வழங்கி பாராட்டுவதோடு, அவர்களின் மேற்படிப்புகளுக்காகும் செலவினையும் அரசே ஏற்றுக் கொள்கிறது.
2012-2013ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 9 மாணவிகள், இரண்டாம் இடத்தைப் பெற்ற 50 மாணவ மாணவிகள் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்ற 129 மாணவ மாணவிகள், என மொத்தம் 188 மாணவ மாணவிகள்;
12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 2 மாணவர்கள், இரண்டாம் இடத்தைப் பெற்ற 2 பேர் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்ற 9 மாணவ மாணவிகள், என மொத்தம் 13 மாணவ மாணவிகள்;
என மொத்தம், 201 மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மடிக்கணினிகளை வழங்கியதோடு, உங்கள் சாதனைகளைக் கண்டு உங்கள் பெற்றோர்கள் பெருமைப்படுவதைப் போல, தமிழக அரசும் குறிப்பாக நானும் உங்கள் சாதனைக்காக மிகவும் பெருமிதம் அடைகிறேன்; உங்கள் அனைவருக்கும் நல்ல ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன் என்று மனதார வாழ்த்தினார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து மடிக்கணினிகளைப் பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகள் தங்களைப் பாராட்டி மடிக்கணினிகளை வழங்கி ஊக்குவித்தமைக்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தெரிவித்துக் கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் வைகைச்செல்வன், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
_0.jpg)
No comments:
Post a Comment