Thursday, June 27, 2013
பனிஹால் (காஷ்மீர்)::காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள, இந்தியாவின் மிக
நீளமான சுரங்க ரயில் பாதையில், பிரதமர் மன்மோகன் சிங், நேற்று ரயில் போக்குவரத்தை
துவக்கி வைத்தார்.பனிப் பொழிவு காஷ்மீர் மாநிலத்தில், பனிப் பொழிவு அதிகமாக இருப்பதால், நெடுஞ்சாலைகளில், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக, ஜம்மு பகுதியில் உள்ள பனிஹால் என்ற நகரத்தையும், காஷ்மீர் பள்ளத் தாக்கு பகுதியில் உள்ள, காஜிகுண்ட் என்ற நகரத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலை, பனிப் பொழிவால் அதிகம் பாதிக்கப்படுகிறது.
பீர் பஞ்சால் மலைப் பகுதியை சுற்றித் தான், இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மலைப் பகுதி குறுக்கிடுவதால், பனிஹாலில் இருந்து, காஜிகுண்டுக்கு வருவதற்கு, 35 கி.மீ., பயணிக்க வேண்டும்.
இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், மலைப் பகுதியை குடைந்து, சுரங்க ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கு முன், இந்த பணி துவங்கப்பட்டது. சமீபத்தில், இந்த பணி முடிவடைந்தது. இதில், 11 கி.மீ., தூரத்துக்கு, 1,691 கோடி ரூபாய் செலவில், சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சுரங்க ரயில் பாதைகளிலேயே, இது தான், மிக நீளமானது.
கொடியசைத்து... இந்த ரயில் பாதை துவக்க விழா, நேற்று, பனிஹாலில் நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, காஷ்மீர் கவர்னர், வோரா, முதல்வர் உமர் அப்துல்லா, ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர், இந்த விழாவில் பங்கேற்றனர். பிரதமர் மன்மோகன் சிங், கொடியசைத்து, ரயில் போக்குவரத்தை துவக்கி வைத்தார்.
அவர் பேசுகையில்,""இந்த திட்டத்தை போலவே, உதாம்பூர் - பனிஹாலை இணைக்கும் ரயில் போக்குவரத்து திட்டமும், குறித்த காலத்துக்குள் முடிக்கப்படும். காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும், மத்திய அரசு அளிக்கும்,'' என்றார். காங்., தலைவர் சோனியா பேசுகையில், ""காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக, முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான, உமர் அப்துல்லா, கடுமையாக உழைத்து வருகிறார்,'' என்றார்.
ஜித்தேந்திரா சிங், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் : பிரதமரின் காஷ்மீர் பயணத்தின்போது, சமீபத்தில் நடந்த நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவிப்பார் என, அங்குள்ள மக்கள், ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அதுபோன்ற திட்டங்கள் எதையும், அவர் அறிவிக்கவில்லை. இது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.






No comments:
Post a Comment