Wednesday, June 5, 2013

உள்நாட்டு பாதுகாப்புக்காக காவல்துறையை நவீனப்படுத்த வேண்டும் : பிரதமர் மன்மோகன்சிங்!

Wednesday, June 05, 2013
புதுடெல்லி::டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் முதல்வர்கள் மாநாடு தொடங்கியது. உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது: தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு துணையாக  இருக்கும். மாநில அரசுகள் ஒத்துழைப்பு வாயிலாக தீவிரவாதத்துக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நக்சல் வன்முறைகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்.

ஜிகாதி குழுக்களின் அச்சுறுத்தல் தொடர்கிறது. பஞ்சாபில் காலிஸ்தான் தீவிரவாதத்தை துளிர்க்க வைக்க ஐஎஸ்ஐ முயற்சித்து வருகிறது. கள்ள நோட்டுகள் புழக்கம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இவ்வாறு ஷிண்டே பேசினார். இதை தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: சட்டீஸ்கரில் நக்சல் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பின்னர் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. ஜனநாயக நாட்டில் இதுபோன்ற வன்முறைகளுக்கு இடமில்லை. இது போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

நக்சல் பாதிப்புள்ள 34 இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு நிலைமை கவலை அளிப்பதாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாடு முன்னேற சமூக ஒற்றுமை மிகவும் அவசியம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. சிறுபான்மை குழுக்களின் குறிப்பாக எஸ்சி, எஸ்டி இனத்தவர்களின் சிறப்பு தேவைகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

இந்தோ - சீனா மற்றும் இந்தோ - பூடான் எல்லைகளில் சாலைகள் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மிகவும் இன்றியமையாததாகும். உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள காவல்துறையை நவீனப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். இந்த சவால்களை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவையும், உங்களிடமிருந்து நல்ல ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.

 

No comments:

Post a Comment