Sunday, June 9, 2013

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 6 பேர் பலி – 43 பேர் காணவில்லை!


Sunday, June 09, 2013
இலங்கை::அதிக காற்றும் மற்றும் மழை காரணமாக மேலும் 43 பேர் காணாமல் போய் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஆறு பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் மொத்தமாக 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மன்னாரில் இருந்து கொழும்பு – காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதி தொடர்ந்தும் கொந்தளிப்பதாக இருப்பதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதிகளில் அதிக காற்று வீசுவதால், மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபட வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் இன்றைய தினம் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

கடற்றொழிலுக்காக சென்று சீரற்ற வானிலையால் காணாமல்போயுள்ள 36 மீனவர்களை தேடும் பணிகள் முப்படையின் ஒத்துழைப்புடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

காலநிலை சீர்கேட்டினால் விபத்திற்குள்ளான 37 படகுகளும் காணாமற் போயுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படகுகள் காலி, நீர்கொழும்பு, களுத்துறை மற்றும் கொழும்பிலிருந்து சென்ற படகுகள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை தொடரும் சீரற்ற வானிலையால் ஆறுகள் மற்றும் குளங்கள் சிலவற்றின் நீர் மட்டமும் உயர்வடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தடன் 318 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமானோர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரத்து 114 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதில் 60 வீ்டுகள் முற்றாகவும் ஆயிரத்து 54 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரத்தினபுரி மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் 40 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி மேலும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment