Sunday, June 23, 2013

உத்தரகண்டில் மீட்கப்பட்டதமிழக யாத்ரீகர்கள் 275 பேர் விமானம் மூலம் சென்னை திரும்பினர்!

Sunday, June 23, 2013
சென்னை::உத்தரகண்ட் மாநிலத்தில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில், சிக்கிய தமிழக யாத்ரீகர்களில், 275 பேர், இதுவரை மீட்கப்பட்டு, டில்லி அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில், சமீபத்தில் பெய்த பேய் மழையால், பெரும் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் இருந்து, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புனித தலங்களுக்கு யாத்திரை சென்றவர்கள், மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.தமிழகத்திலிருந்து, யாத்திரை சென்றவர்களில், 399 பேர், இதேபோல், உத்தரகண்டின் சில பகுதிகளில் சிக்கிக் கொண்டனர். அப்படி சிக்கிய தமிழக யாத்ரீகர்களில், 275 பேர், இதுவரை மீட்கப்பட்டு, அவர்கள் எல்லாம், டில்லி தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து, உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பின், சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, டில்லி தமிழ்நாடு இல்ல ஆணையர், ஜஸ்பீர் சங் பஜாஜ் நேற்று கூறியதாவது: உத்தரகண்ட் மாநிலத்திலிருந்து மீட்கப்பட்டு, டில்லிக்கு அழைத்து வரப்பட்ட, தமிழக யாத்ரீகர்கள், 83 பேர், வெள்ளிக்கிழமையன்றும், 192 பேர், நேற்றும், பல விமானங்களில், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள, 124 யாத்ரீகர்களில், 80 பேருடன், டில்லி தமிழ்நாடு இல்ல அதிகாரிகளும், தமிழக அரசின் உயர்மட்ட குழுவினரும், தொலைபேசியில் பேசி வருகின்றனர். மற்றவர்களை, இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. உத்தரகண்டில் சிக்கிக் கொண்ட, தமிழக யாத்ரீகர்களுக்காக, டில்லி தமிழ்நாடு இல்லத்தில், துவக்கப்பட்ட உதவி மையத்திற்கு வரும், தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை, நேற்று வெகுவாக குறைந்துள்ளது. உதவி மையத்திற்கு இரண்டு, மூன்று அழைப்புகள் மட்டுமே வந்துள்ளன. இதைப் பார்க்கும் போது, மிகக் குறைவான தமிழக யாத்ரீகர்களே, வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியிருக்கலாம் என, நம்பப்படுகிறது. இவ்வாறு பஜாஜ் கூறினார்.

இதற்கிடையில், உத்தரகண்டில், மழை வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து மீட்கப்படும், தமிழக யாத்ரீகர்களை, பத்திரமாக டில்லிக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட, டேராடூன் சென்றுள்ள, உயர்மட்ட குழுவின் தலைவரான, தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி, ஜக்கையனை, தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் கூறியதாவது:தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான யாத்ரீகர்கள் மீட்கப்பட்டு, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ள்ளனர். உத்தரகண்ட் மாநில அரசு, டேராடூனில் அமைத்துள்ள, கட்டுப்பாட்டு அறையை, நாங்கள் அவ்வப்போது, தொடர்பு கொண்டு பேசி வருகிறோம்.கட்டுப்பாட்டு அறை தரும் தகவல்கள் அடிப்படையில், ரிஷிகேஷ், ஹரித்வார் பயணம் மேற்கொண்டு, வெள்ள பாதிப்பு பகுதிகளில் சிக்கி, அங்கிருந்து மீட்கப்பட்டு, டேராடூன் வந்து சேர்ந்த தமிழக யாத்ரீகர்களை, டில்லிக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இன்னும் சில நாட்கள், டேராடூனில் தங்கி, இந்தப் பணியை மேற்கொள்வோம்.இவ்வாறு ஜக்கையன் கூறினார்.

No comments:

Post a Comment