Friday, June 07, 2013
கார்டிப்::சாம்பியன்ஸ் டிராபி தொடக்க லீக் ஆட்டத்தில், தென் ஆப்ரிக்கவை 26 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. உலகின் டாப் 8 அணிகள் மோதும் மினி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது.
கார்டிப், சோபியா கார்டன் மைதானத்தில் நடந்த தொடக்க விழாவில், டிரம்ஸ் கலைஞர்கள் பாரம்பரிய இசை முழங்க 8 நாடுகளின் தேசியக் கொடிகளும் மைதானத்துக்குள் அணிவகுத்தன. வேல்ஸ் இளவரசர், போட்டியை தொடங்கி வைத்தார்.
டாசில் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பந்துவீசியது. இந்திய அணி தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா, ஷிகார் தவான் களமிறங்கினர். 10 ஓவர் முடிவில் இந்தியா 53 ரன் எடுத்தது. இதன் பிறகு இருவரும் அதிரடியில் இறங்க ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்தியா 15.3 ஓவரில் 100 ரன்னை எட்டியது. ரோகித் , தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 127 ரன் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. ரோகித் 65 ரன் எடுத்து (81 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தார். அடுத்து தவானுடன் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 83 ரன் சேர்த்தனர். தவான் ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
கோஹ்லி 31 ரன்னில் வெளியேறினார். தவான் 114 ரன் எடுத்து (94 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தார். கார்த்திக் 14, ரெய்னா 9, டோனி 27 ரன் எடுத்து அவுட் ஆயினர். கடைசி கட்டத்தில் ஜடேஜா அதிரடி காட்ட, இந்தியா 300 ரன்னைக் கடந்தது. அஷ்வின் 10 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 331 ரன் குவித்தது. ஜடேஜா 47 ரன் (29 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் மெக்லாரன் 3, சோட்சோபி 2, டுமினி ஒரு விக்கெட் வீழ்த்தினர். 50 ஓவரில் 332 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. 31 ரன்னுக்குள் 2 விக்கெட்களை இழந்த நிலையில் பீட்டர்சன்னும் டிவில்லியர்சும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 124 ரன் சேர்த்தனர். ஸ்கோர் 155 ஆக இருந்த போது, ஜடேஜாவின் சிறப்பான பீல்டிங்கினால் பீட்டர்சன்(68) ரன் அவுட்டானார். இதன்பின் வந்த டுமினி (14), டிவில்லியர்ஸ்(70), மில்லர்(0) அடுத்தடுத்து அவுட்டாக இந்தியாவின் பக்கம் வெற்றி திரும்பியது.
டுபிளெஸ்சிஸ், மெக்லலாரன் ஜோடி, அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 50 ரன் சேர்த்தனர். டுபிளெஸ்சிஸ் (30) அவுட்டானபின், இந்திய வெற்றி உறுதியானது. முடிவில் தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 305 ரன்னுக்கு ஆல்அவட்டானது. மெக்லரீன் 71 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதையடுத்து இந்தியா 26 ரன் வித்தியாசத்தில் வென்றது. இந்திய தரப்பில் குமார், யாதவ், ஜடேஜா, இஷாந்த் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது தவானுக்கு வழங்கப்பட்டது. இந்தியா அடுத்து 11ம் தேதி வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது.







No comments:
Post a Comment