Monday, June 17, 2013

13 தொடர்பில் அரசியல் களத்தில் தீவிர நிலைமை தற்போது மேலும் அதிகரித்துள்ளது!!

Monday, June 17, 2013
இலங்கை::13 வது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடங்கியிருந்த இரண்டு மாகாணங்களை ஒன்று சேர்க்கும் நடைமுறையை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து தற்போது 13 தொடர்பில் அரசியல் களத்தில் தீவிர நிலைமை தற்போது மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய அந்த கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, இதற்கு மாற்று கருத்தை முன்வைத்தார்.

13 வது அரசியலமைப்பு திருத்தத்தில் எந்த இடத்திலும் மாகாண சபைகளை ஒன்றிணைக்கும் தகுதியை நீக்குவதற்கு எந்தவித சட்டரீதியான ஏற்பாடுகளும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பொதுபல சேனா அமைப்பின் மாநாடு ஒன்று நேற்று பதுளையில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், 13 வது அரசமைப்பு திருத்தத்திற்கு இடமளிக்க போவதில்லை என்றும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வீதிக்கு இறங்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிடடார்.

இதனிடையே, 13 இல் அடங்கியுள்ள காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை அரசாங்கம் நீக்காத பட்சத்தில் கடும் நடவடிக்கை முன்னெடுக்க தயார் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து தரப்பினரும் இது தொடர்பில் நிபந்தனையற்ற வகையில் ஒருங்கிணையுமாறு அழைப்பு விடுப்பதாக அந்த இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 13 வது அரசியலமைப்பு திருத்தம் இந்திய அரசாங்கத்தினால் பலவந்தமாக திணிக்கப்பட்ட ஒன்று என்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய பெருந்தோட்டத்துறை கைத்தொழில் பிரதியமைச்சர் எர்ல் குணசேகர தெரிவித்தார்.
 
 புலிகளின் தலைவர் பிரபாகரன் போர் மூலம் இலங்கையை இரண்டாக்க  கண்ட கனவையே அரசு போர் புரியாமலேயே நனவாக்க முனைகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் ஐ.தே.கவின் உபதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பெரேரா. 
 
அரசமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து அதை நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளை இயங்கவைத்த பெருமை ஐக்கிய தேசியக் கட்சிக்கே உண்டு என்று தெரிவித்த அவர் அரசிலுள்ள பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் வடக்குத் தேர்தலுக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் தமது முடிவைத் தெளிவாக அறிவிக்கவேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் மீண்டும் இனவாதம் தோன்றி பேராபத்து ஏற்படும் எனவும் குறிப்பிட்டார். 
 
அத்துடன், பிரபாகரன் போர் மூலம்  நாட்டை பிளவு படுத்தலாம் என்று கண்ட கனவை இன்று போரின்றி தாமாகவே வழங்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. 13ஆவது திருத்தச் சட்டம்,  வடக்குத் தேர்தல் ஆகியவை குறித்து ஐ.நா. சபைக்கும், சர்வதேசத்துக்கும் மற்றும் இந்தியத் தலைவர்களுக்கும் அரசு வாக்குறுதி அளித்துள்ளது. இதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பிலிருந்து என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment