Monday, June 10, 2013

13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பல தற்போதைய நிலை!

Monday, June 10, 2013
இலங்கை::13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பல தற்போதைய நிலையில் பல ஊடகவியலாளர்கள் சந்திப்புகளில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
 
எனினும், காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் இதுவரையிலும் ஒரு தீர்மானத்திற்கு வரவில்லை.
 
எவ்வாறாயினும் 13வது அரசியல் அமைப்பில் காணப்படும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் பொது ஜன வாக்கொடுப்பு ஒன்றை மேற்கொள்வதற்கு சகல அரசியல் கட்சிகளும் இணக்கப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி குறிப்பிட்டுள்ளது.
 
முன்னணியின் ஊடக பேச்சாளர் எம். முசம்மில் எமது செய்தி சேவைக்கு இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் பொதுமக்கள் விருப்புக்கு அமைய காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
 
எனினும், காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை நீக்க அரசாங்கத்திற்கு தைரியம் இல்லாத சந்தர்ப்பத்தில் பொது மக்கள் கருத்துக்கணிப்பிற்கு செல்வதானது பாதக நிலையையே ஏற்படுத்தும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார குறிப்பிட்;டார்.
 
இந்த நிலையில், முற்போக்கான கருத்துக்களை வெளியிட்டு வரும் மொழிகள் மற்றும் இன ஒருமைப்பாடு அமைச்சர் வாசு தேவ நாணயக்காரவிடம் இந்த பொது ஜன வாக்கொடுப்பு குறித்து எமது செய்தி சேவை வினவியது.
 
13வது அரசியல் அமைப்பை நீக்க யாரும் விரும்பவில்லை. ஜாதிக ஹல உறுமையவிற்கும், விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியுமே அதனை நீக்க கோருகின்றது. வேறு எந்த கட்சியும் அதனை நீக்க கோரவில்லை. அதனால் அது தொடர்பில் பிரச்சினை இல்லை என்று தெரிவித்தார்.
 
எவ்வாறாயினும் இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமசந்திர கடந்த தினத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
 
இது தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்மானத்தை உரிய சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளும் என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment