Wednesday, June 19, 2013

பலி எண்ணிக்கை 135 ஆக உயர்வு புனித பயணம் மேற்கொண்ட சுமார் 1 லட்சம் யாத்ரிகர்கள் நடுவழியில் தவிப்பு

Wednesday, June 19, 2013
புதுடெல்லி::உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் நிலச்சரிவில் சிக்கியும் பலியானவர்கள் எண்ணிக்கை 135-ஐ தாண்டியுள்ளது. வீடுகளை இழந்து ஆயிரக்கணக்கானோர் தவிக்கின்றனர். ஆன்மிக யாத்திரை மேற்கொண்டு பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட இடங்களின் அருகே சிக்கியிருப்பவர்களை பத்திரமாக மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் 110 பேர் பலியாகியுள்ளனர். ருத்ரபிரயாக் மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அலக்நந்தா ஆற்றின் கரையோரம் இருந்த 40 ஓட்டல்கள் உள்பட 73 கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கேதார்நாத், பத்ரிநாத் போன்ற இடங்களுக்கு புனித பயணம் மேற்கொண்ட சுமார் 1 லட்சம் யாத்ரிகர்கள், ஆங்காங்கே நடுவழியில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் ராணுவம் இறக்கிவிடப்பட்டுள்ளது. நிவாரண பணிகளை மேற்கொள்ள 7 ஹெலிகாப்டர்களை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், உத்தரகண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகளுக்கு அரியானா மாநில அரசு ரூ.10 கோடி நிதி உதவி அறிவித்துள்ளது. அரியானா முதல்வர் புபிந்தர்சிங், நேற்று உத்தரகண்ட் முதல்வர் விஜய்பகுகுணாவுடன் தொலைபேசியில் பேசினார். ரூ.10 கோடி நிதி உதவியுடன் தேவைப்படும் இதர உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதேபோல் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் நேற்று விஜய் பகுகுணாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நிவாரண பணிகளுக்கு ரூ.2 கோடி நிதி உதவி அளிப்பதாக கூறினார். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை பத்திரமாக மீட்கும் பணியில் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கிய தமிழக பக்தர்கள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த சுமார் 75 பக்தர்கள் சமீபத்தில் வடமாநில புனித யாத்திரை தொடங்கினர். பல இடங்களை சுற்றிப் பார்த்த இவர்கள் உத்தரகண்ட் மாநிலம் பத்ரிநாத்துக்கு சென்றுகொண்டிருந்தனர். வழியில் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியதால் உடனடியாக கர்ணப்பிரயாகை என்ற இடத்துக்கு சென்று தங்கினர். அவர்கள் தங்கியிருந்த இடத்தை சுற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பதற்றம் அடைந்தனர்.  ஒரு நாள் முழுக்க அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் தவித்தனர்.

பின்னர், மழை சற்று குறையத் தொடங்கியதால் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். வழியில் பல இடங்களில் நிலச்சரிவு காரணமாக சாலைகள் அரிக்கப்பட்டிருந்தன. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. சோறு, தண்ணீர் கிடைக்காமல் அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் கர்ணப்பிரயாக் - ருத்ரப்பிரயாக் இடையே தமிழக பக்தர்கள் 75 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் உள்பட அப்பகுதியில் சிக்கியிருக்கும் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடக்கிறது.

No comments:

Post a Comment