Tuesday, May 7, 2013

மும்பை, கோல்கட்டாவிலுள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு மிரட்டல்!

Tuesday, May 07, 2013
மும்பை::மும்பை, கோல்கட்டாவில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகங்கள் மீது, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக, பயங்கரவாதிகளிடமிருந்து மிரட்டல் கடிதம் வந்துள்ளதை அடுத்து, மும்பை போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மும்பையில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகம் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக, மும்பையில் செயல்படும், கடற்படை பிரிவின் மேற்கு தலைமையகம், மும்பை போலீசை உஷார்படுத்தியிருந்தது. இந்நிலையில், மும்பை அமெரிக்க தூதரகத்திற்கு, "அல் - ஜிஹாத்' என, பெயரிடப்பட்ட லெட்டர் பேடில், எழுதப்பட்ட கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், ஜூலை மாதம், மும்பையில் செயல்படும் அமெரிக்க தூதரக கட்டடம் மீது, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பையில் மட்டுமல்லாது, கோல்கட்டாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீதும், தாக்குதல் நடத்தப்படும் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதம் குறித்து, மும்பை போலீசுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, அந்த கடிதத்தை, மும்பை போலீசார் ஆய்வு செய்தனர். "அல்-ஜிஹாத்' பெயரில், எவ்வித பயங்கரவாத அமைப்பும் இல்லை. எனவே, ஏற்கனவே செயல்படும் பயங்கவரவாத அமைப்புகள், இப்படியொரு கடிதத்தை அனுப்பியிருக்கலாம் என, சந்தேகப்படுகின்றனர். இந்த கடிதம் எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இக்கடிதத்தை தொடர்ந்து, டில்லியில் உள்ள அமெரிக்க தூதரக தலைமையகத்திற்கு, மும்பை போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்களின் பதிலை எதிர்பார்த்துள்ளனர்.
 
இதையடுத்து, மும்பை, கோல்கட்டாவில் அமெரிக்க தூதரக அலுவலகங்களுக்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் பிற நகரங்களில் செயல்படும், அமெரிக்க தூதரகங்கள் மற்றும் ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும், கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment