Friday, May 17, 2013

5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியலையே? : ஜெயலலிதா!

Friday, May 17, 2013
சென்னை::ஐந்து முறை முதல்வராகவும், நான்கு முறை நிதி அமைச்சராகவும் இருந்த கருணாநிதிக்கு, திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வழிமுறைகள் கூட தெரியவில்லை,'' என, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
சட்டசபையில், முதல்வர் பேசியதாவது:"110வது விதியின் கீழ் வெளியிடும் திட்டங்களுக்கான நிதி ஆதாரம், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் வருமா அல்லது, இதற்கென தனியாக நிதி ஒதுக்கப்படுமா?' என, கேட்டுவிட்டு, "வெறும் அறிவிப்பு' என்பதின் கீழ் வருமா என, கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.

வேண்டும் என்றே கேட்கிறாரா?

மேலும், இந்த அறிவிப்புகளை எல்லாம், சம்பந்தப்பட்ட துறைக்கான அமைச்சர்கள் ஏன் அறிவிக்கவில்லை எனவும், கேள்வி எழுப்பி உள்ளார்.ஐந்து முறை முதல்வராகவும், நான்கு முறை நிதி அமைச்சராகவும் பதவி வகித்த கருணாநிதி, திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வழிமுறைகள் தெரியாமலேயே, அத்தனை ஆண்டுகள், ஆட்சி பொறுப்பில் இருந்தாரா? நிதி ஒதுக்கீடு பற்றி தெரியாமலேயே, கோப்புகளில் கையெழுத்து போட்டாரா அல்லது, வேண்டும் என்றே, இப்படி கேட்கிறாரா?
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் அறிவிக்கப்படும் புதிய திட்டங்களுக்கு, திட்ட நிதி தேவை, முழுமையாக வரையறுக்கப்படாத நிலையில், பட்ஜெட்டில், நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது. எனவே தான், நிதி ஒதுக்கீடு இல்லாத புதிய திட்டங்களுக்கு, தனியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அவை, புது பணிகளாகவும், புது துணை பணிகளாகவும் கருதப்பட்டு, திருத்திய மதிப்பீட்டில், தேவையான நிதி, முழுமையாக ஒதுக்கீடு செய்யப்படும்.அவசரமாக, அந்த புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நிலையில், எதிர்பாரா செலவு நிதியில் இருந்து, நிதி வழங்கப்பட்டு, செலவு செய்யப்படும்.

சபைக்கு வராமலேயே...

பின், இதற்கான நிதி, முதல் துணை மதிப்பீடு மற்றும் இறுதி துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டு, சட்டசபையின் அனுமதி பெறப்படும் என்பதை, சபைக்கு வராமல் வெளியில் இருக்கும் கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.இதில், எவ்வித சந்தேகமும், கருணாநிதிக்கு எழ வேண்டியதில்லை என்பதால் தான், இரு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது குறித்தும், நான் சுட்டிக்காட்டி உள்ளேன்.

அறிவிப்பு வெளியிடாதது ஏன்?

சட்டசபையில், அந்தந்த துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் முடிந்ததும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே, இந்த அறிவிப்புகளை ஏன் வெளியிடவில்லை என்றும், கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.புதிய அறிவிப்புகள், அறிவிப்பாக செய்யப்பட வேண்டும் என்பதற்காக, செய்யப்படுவதில்லை. மானியகோரிக்கை மீதான விவாதங்களின் போது, எம்.எல்.ஏ.,க்கள் கூறும் ஆலோசனைகள், கோரிக்கைகள் ஆகிய வற்றை, நிதித் துறையுடனும், உயர் அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும் ஆலோசித்து, அதன்பிறகே, அறிவிப்புகள் வெளியிட முடியும். அந்த அடிப்படையில் தான், பல அறிவிப்புகள், என்னால் வெளியிடப்பட்டுள்ளன.இவ்வாறு, முதல்வர் பேசினார்.

தங்கள் அரசியல் எதிர்காலம் குறித்து அஞ்சுபவர்கள் தான் குறை கூறுகின்றனர்

சட்டசபையில் நேற்று, முதல்வர், குட்டிக் கதை ஒன்றையும் கூறினார். அவர் கூறியதாவது:இந்த திட்டங்கள், தங்களுக்கு பயன் அளிக்காது; தங்கள் அரசியல் எதிர்காலத்தை, நிர்மூலமாக்கிவிடும் என்று நினைப்பவர்கள் தான், இந்த அறிவிப்புகளுக்காக, அரசை குறை கூறுகின்றனர்; கேலி செய்கின்றனர்.பூனை, எலி கதைஅரசி
ன் திட்டங்கள் எல்லாம் நல்லதா, கெட்டதா என்பது, காண்பவரின் தன்மையை பொறுத்தது. ஒரு முறை, "உலகம் நல்லதா; கெட்டதா?' என, குருவிடம், சிஷ்யன் கேள்வி கேட்டான். உடனே, "பூனையின் பல் நல்லதா; கெட்டதா?' என, திருப்பி கேட்டார் குரு. சிஷ்யன் குழம்பினார்; பின், குரு விளக்கினார்.பூனை குட்டியிடம் போய், "தாய் பூனையின் பல் நல்லதா; கெட்டதா?' என, கேட்டால், தாய் பூனையின் பல், கருணையின் இருப்பிடம் என்று சொல்லும்.ஏனெனில், பூனைக் குட்டி, தன் தாயை, முற்றிலும் நம்பி இருக்கிறது. தாய் பூனை, தன் குட்டியை, பல்லால் கவ்வி எடுத்து, பாதுகாப்பான இடத்தில் வைக்கிறது. அதற்கு, தேவையான உணவை அளிக்கிறது. எனவே, பூனை குட்டிக்கு, பூனையின் பல், கருணையின் இருப்பிடமாக இருக்கிறது.அதுவே, பூனையின் பல்லைப் பற்றி, ஒரு எலியிடம் கேட்டால், "கடவுள், பூனைக்கு, குத்தூசியைப் போன்ற பற்களை படைத்திருக்கிறாரே? என்ன கொடுமை!' என, கவலையுடன் சொல்லும்.அது போல், "உலகம் நல்லதா; கெட்டதா' என்பதும், உலகத்தை, பார்ப்பவரின் தன்மையை பொறுத்தது என, குரு விளக்கினார். இது, ராமகிருஷ்ணர் கூறிய விளக்கம்.

வயிற்றெரிச்சல்

இதுபோல், தமிழகத்தை, தாய்போல் அரவணைத்து காப்பாற்றும் இந்த அரசை, தமிழக மக்கள் அனைவரும் பாராட்டுகின்றனர். அதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், வயிற்றெரிச்சல் காரணமாக, தங்களுடைய அரசியல் எதிர்காலம் அழிந்துபோய்விடும் என, அஞ்சி, அரசின் மீது, சேற்றை வாரி இறைக்கின்றனர்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.

No comments:

Post a Comment