Wednesday, May 1, 2013

ராமதாஸ் கைது கண்டித்து பாமகவினர் போராட்டம் 3 பஸ்கள் எரிப்பு 150 பஸ்கள் சேதம் : வன்முறையால் பதற்றம்!

Wednesday, May 01, 2013
சென்னை::ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து வட மாவட்டங்களில் பாமகவினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நள்ளிரவில் பல இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் 150க்கும் அதிகமான பஸ்கள் உடைக்கப்பட்டன. 3 பஸ்கள் எரிக்கப்பட்டன. மரங்களை வெட்டி சாலைகளில் போட்டுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மறியல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாக சுமார் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா நடத்த ஐகோர்ட் பல நிபந்தனைகளை விதித்திருந்தது. இந்நிலையில், மரக்காணம் அருகே விழாவுக்கு வந்தவர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, கலவரமாக மாறியது. போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியும் தடியடி நடத்தியும் கலவரத்தை ஒடுக்கினர். இது தொடர்பாக ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, மாமல்லபுரம் விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ், காடுவெட்டி குரு எம்எல்ஏ, பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து இரவு 11.35 மணி வரை பேசினர். மரக்காணம் கலவரம் தொடர்பாக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, விதிமுறையை மீறி இரவு 11.35 வரை பேசிய ராமதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் மரக்காணம் சம்பவம் குறித்து நீதிபதி தலைமையில் நீதி விசாரணை அல்லது சிபிசிஐடியோ, சிபிஐயோ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி விழுப்புரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பாமக அறிவித்திருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற ராமதாஸ், ஜி.கே.மணி, எம்எல்ஏ கணேஷ்குமார் உள்பட 511 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 9 பேர் பெண்கள். அனைவரும் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். பின்னர் ராமதாஸ் உள்பட 511 பேரையும் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி, அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து சென்னை எம்எல்ஏ ஹாஸ்டலில் தங்கியிருந்த காடுவெட்டி குரு எம்எல்ஏ உள்பட 4 பேரும், தாம்பரத்தில் தங்கியிருந்த முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகமும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.ராமதாஸ் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக அசம்பாவித சம்பவங்கள் நடக்கலாம் என்று கருதி வடமாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டது. கிராமங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. ராமதாஸ் கைது கண்டித்து பல இடங்களில் பாமகவினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தாம்பரத்தில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை, பாலுசெட்டிசத்திரம் அருகே தாமல் என்ற இடத்தில் ஒரு கும்பல் வழிமறித்து கல்வீசி தாக்கியது. உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பதற்றமடைந்த பயணிகள், கீழே இறங்கினர். இதையடுத்து பஸ்சை அந்த கும்பல் தீ வைத்து எரித்தது.

திருப்பதியில் இருந்து ஆரணிக்கு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. வேலூர் மாவட்டம் கொளப்பேரி என்ற இடத்தில் அதிகாலை 1.30 மணிக்கு அந்த பஸ் மீது 4 பேர் கொண்ட கும்பல் கல்வீசி தாக்கியது. டிரைவர் பஸ்சை நிறுத்தியதும் பயணிகள் இறங்கி ஓட்டம் பிடித்தனர். அந்த பஸ்சையும் மர்ம கும்பல் தீ வைத்து எரித்தது. அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையிலும் ஒரு அரசு பஸ் கொளுத்தப்பட்டது.

வடமாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது. கிழக்கு கடற்கரை சாலையில் 5 பஸ்கள் உடைக்கப்பட்டன. திருக்கழுக்குன்றம் அடுத்த கருமாரப்பாக்கம் என்ற இடத்தில் பாமகவினர் பனைமரத்தை வெட்டி சாலையில் போட்டனர். இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இன்று காலை மரத்தை அகற்ற போலீசார் சென்றனர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ‘மரத்தை வெட்டி போட்டவர்களை கைது செய்யும் வரை இதை அகற்றக் கூடாது’ என வாக்குவாதம் செய்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்துவிட்டு, மரத்தை அகற்றினர். இன்று காலையில் திருக்கழுக்குன்றம் அருகே 5 கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், சேலம் உள்பட பல மாவட்டங்களில் மரங்களை வெட்டி சாலையில் போட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். சாலையோர மரங்களை சிலர் தீ வைத்து கொளுத்தினர். தமிழகம் முழுவதும் நேற்றிரவு முதல் நடந்த வன்முறை சம்பவங்களில் 150 பஸ்கள் உடைக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் 26, வேலூரில் 15, திருவண்ணாமலையில் 6, காஞ்சிபுரத்தில் 10, ஊத்துக்கோட்டை, சதுரங்கப்பட்டினத்தில் தலா ஒன்று, திருத்தணியில் 3, கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரணியில் 3  பஸ்கள் உள்பட தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கடலூர் உள்பட பல இடங்களில் பஸ்கள் உடைக்கப்பட்டன. சில இடங்களில் கார்களும் அடித்து நொறுக்கப்பட்டது.

காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் இன்று மதியம் வந்துகொண்டு இருந்த ஆந்திர அரசு பஸ்சை வழிமறித்து மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு ஓடிவிட்டனர். பயணிகள் இறங்கி ஓடியதால் உயிர் தப்பினர். இந்த விபத்தில் பஸ்சின் இருக்கை மற்றும் இன்ஜின் பகுதி சேதம் அடைந்தது. எம்ஜிஆர் சிலைக்கு தீ நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை மீது நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது. அங்கிருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதுபற்றி அதிமுகவினர் சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. கடலூர் மாவட்டத்திலும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. நேற்றிரவு முதல் இன்று காலை 6 மணி வரை பஸ்கள் இயக்கப்படவில்லை. 6 மணிக்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடனும், சில இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடனும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திண்டிவனம், விக்கிரவாண்டி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. அந்த பகுதிகளில் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.மறியல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாக சுமார் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோர்ட்களில் ஆஜர்படுத்தப்பட்டு பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். வடமாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment