Tuesday, April 02, 2013
சென்னை::இலங்கை பிரச்சினைக்காக தே.மு.தி.க வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க தயாராக உள்ளது. இதனை மற்ற கட்சிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.
சட்ட சபையிலிருந்து 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, தே.மு.தி.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. சென்னையில் விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகர் மார்க்கெட் அருகில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்திற்கு மேற்கு சென்னை மாவட்ட செயலாளர் ஏ.எம்.காமராஜ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:-
சட்டசபையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்டு செய்து நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்து உள்ள தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
என் கட்சி எம்.எல்.ஏ.க்களை பிரித்து விஜயகாந்தை தனிமைப்படுத்த முடியாது. பயத்தை கண்டு கூட பயம் கிடையாது. அதேபோல் தே.மு.தி.க.வில் உண்மையான தொண்டர்கள் இருக்கிறார்கள். யாராலும் தே.மு.தி.க.வை அழிக்க முடியாது. விஜயகாந்த் இல்லை என்றால் மற்றவர்கள் வழிநடத்துவார்கள். காவல் துறை ஏவல்துறையாக இருக்க வேண்டாம். உங்கள் மனசாட்சிக்கு பயந்து கடமையை செய்யுங்கள்.
தமிழகத்தில் கடந்த முறை ஆட்சிக்கு வந்த போது 24 மணிநேரமும் மின்சாரம் வரும் என்று சொன்னார்கள். ஆனால் சென்னை தவிர மற்ற நகரங்களில் 18 மணிநேரம் மின்தடை இருக்கிறது. கிராமப்புறங்களில் மின்சாரமே கிடையாது. இதனால் படிக்கும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இருந்து அடுத்த மாதம் மின்சாரம் வரும் என்று மத்திய மந்திரி நாராயணசாமி சொன்ன பதிலேயே சொல்லி வருகிறார். பிரதமரும் தற்போது அதே கருத்தை வலியுறுத்தி வருகிறார். மின்சாரம் வந்தபாடு தான் இல்லை.
மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்துகிறது, உடனே தமிழக அரசும் விலையை ஏற்றுகிறது. மக்கள் என்ன செய்வார்கள்.
15, 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக முதல்-அமைச்சர் ஒரு கையெழுத்தில் மூடிவிட்டார்.
ஆனால் தமிழகம் முழுவதும் பிராந்தி கடைகளால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை. தமிழகத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மக்களை ஏமாற்றி வருகிறது. கிழிந்து போன புத்தகத்தை ஒன்றாக சேர்த்து பட்ஜெட்டாக அறிவித்து உள்ளனர். மாநகராட்சி பட்ஜெட்டும் அப்படிதான் இருக்கிறது. இதுபற்றி பேச அனுமதி மறுக்கிறார்கள்.
நான் நடிகராக இருந்ததிலிருந்தே இலங்கை தமிழர்களுக்காக பலவகையில் போராடி உள்ளேன். என் மகனுக்கு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பெயர் வைத்துள்ளேன். இலங்கை தமிழர்கள் முகத்தில் சிரிப்பை காணும் வரை என் பிறந்தநாளை கொண்டாட கூடாது என்று முடிவெடுத்து, அதன்படி நடந்து வருகிறேன்.
கட்சி தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகிறேன். 2009ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை இலங்கை பிரச்சினைக்காக தே.மு.தி.க. புறக்கணித்தது. மற்ற கட்சிகளையும் புறக்கணிக்க வலியுறுத்தினேன். ஆனால் யாரும் செய்யவில்லை. அப்படி புறக்கணித்திருந்தால் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார். தமிழ்ஈழ மக்களுக்கும் விடுதலை கிடைத்திருக்கும்.
தற்போது வருகின்ற பாராளுமன்ற தேர்தலை இலங்கை தமிழர்களுக்காக தே.மு.தி.க. நிச்சயம் புறக்கணிக்கும். மற்ற கட்சிகளும் கண்டிப்பாக தேர்தலை புறக்கணிக்க வேண்டும். தவறினால் நாங்கள் மறுபரிசீலனை செய்வோம்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
No comments:
Post a Comment