Wednesday, March 20, 2013
ஆவடி::இலங்கை தமிழர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண வலியுறுத்தி ஆவடி பகுதியில் மாணவர்கள், டிரைவர்கள், வியாபாரிகள் இன்று உண்ணாவிரதம், சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ஆவடி பகுதி அனைத்து ஆட்டோ, ஷேர் ஆட்டோ டிரைவர்கள் சார்பாக ஆவடி நகராட்சி அருகே உண்ணாவிரதம் நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்துகொண்டனர். ஆவடி முழுவதும் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. ஆவடி ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆவடி அருகே திருநின்றவூர் காந்தி சிலை அருகில் இன்ஜினியரிங் மற்றும் கலைக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
கொரட்டூர் கிராம இளைஞர்கள் சங்கம் சார்பில், பொதுமக்கள் 200 பேர் பாடி சிடிஎச் சாலை காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் இருந்தனர். பட்டாபிராம் இந்துக் கல்லூரி மாணவர்கள் 100 பேர், சிடிஎச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். திருமுல்லைவாயல் ரயில் நிலையத்தில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது சென்னையில் இருந்து திருவள்ளூர் சென்ற ரயிலை மறித்து கோஷம் போட்டனர். இலங்கை பிரச்னையை தீர்க்கவேண்டும். தனி ஈழம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ராஜபக்சேவை தூக்கில் போடவேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.

No comments:
Post a Comment