Wednesday, March 20, 2013
வேதாரண்யம்::தமிழக கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று இரவு அரிவாளாலும் இரும்பு கம்பியாலும் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த 12 மீனவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். நாகை நம்பியார் நகரை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 50 விசைப்படகுகளில் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படை வீரர்கள் 10 பேர் ஒரு படகில் வந்தனர். கண்ணையன் என்பவரது படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கண்ணையன், சசிக்குமார், செல்வக்குமார், பொன்னுச்சாமி ஆகியோரை மிரட்டிய இலங்கை கடற்படையினர், பிடித்து வைத்திருந்த மீன்களை கடலில் கொட்டுமாறு கூறினர்.
மீன்பிடி கருவிகளையும் கடலில் போடச் சொல்லி துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். மீனவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டியதுடன், தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் 4 மீனவர்களையும் வெட்டிய இலங்கை கடற்படையினர் அங்கிருந்து சென்றுவிட்டனர். காயமடைந்த மீனவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகே மீன்பிடித்த மீனவர்கள் விரைந்து வந்தனர். அவர்களை மீட்டு ஆறுகாட்டுத்துறை கரைக்கு கொண்டு வந்தனர். காயமடைந்த 4 மீனவர்களும் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை வேதாரண்யம் எம்எல்ஏ காமராஜ் பார்த்து ஆறுதல் கூறினார். நடுக்கடலில் நடந்த அராஜகம் குறித்து மீன்வள துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கடலோர காவல்படை, க்யூ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுகை மாவட்டம் மீமிசல் அடுத்த அய்யம்பட்டினத்தை சேர்ந்த 160 மீனவர்கள் 40 நாட்டுப்படகில் கடலுக்கு நேற்று மதியம் மீன்பிடிக்க சென்றனர். நேற்று இரவு அந்தோணி மற்றும் ரூபர்ட் ஆகியோரது படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை நெருங்கி வந்த இலங்கை கடற்படையினர், ‘இங்கு எதுக்கு மீன்பிடிக்க வந்தீங்க’ என்று கேட்டு அவர்களை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். படகில் இருந்த மீன்களை கடலில் கொட்டி, வலைகளை அறுத்துள்ளனர். காயமடைந்த 8 பேரையும் சக மீனவர்கள் மீட்டு கரை திரும்பினர்.

No comments:
Post a Comment