Friday, March 22, 2013

இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய அரசின் அழுத்தம் தொடரும்: அமைச்சர் வாசன் நம்பிக்கை!

Friday, March 22, 2013
புதுடெல்லி::ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது, இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, வரும் செப்டம்பரில், மறு ஆய்வு செய்யப்படும். அதற்கு அடுத்ததாக, அடுத்த ஆண்டு மார்ச்சில், மீண்டும் ஒரு ஆய்வு கூட்டம் நடைபெறும். அவற்றில், முழு அழுத்தம் கொடுப்பதன் மூலம், இலங்கை தமிழர்களுக்கு, முழு புனர்வாழ்வை மத்திய அரசு ஏற்படுத்தி தரும்,'' என, மத்திய அமைச்சர் வாசன் நம்பிக்கை தெரிவித்தார்.

டில்லியில் நேற்று அவர் கூறியதாவது: தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை புரிந்து, ஐ.நா., சபையின், மனித உரிமைகள் ஆணையத்தில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இந்தியா ஆதரித்துள்ளது. இலங்கை தமிழர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி தர, தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும். தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம், இவ்விஷயத்தில் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது; இது நல்ல விஷயமே. தமிழக மக்களும், மாணவர்களும் சேர்ந்து, இலங்கை தமிழர்கள் விஷயத்தில் ஒட்டுமொத்தமாக, உறுதுணையாக இருப்பதற்கு, மத்திய அரசும் துணை நிற்கும். ஐ.நா., சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், நீர்த்துப்போனதற்கு இந்தியா காரணம் என்பது, தவறான பிரசாரம்.

46 நாடுகளின் உதவியோடு, அமெரிக்கா இந்த தீர்மானத்தை கொண்டு வந்தது. அதை ஏற்று, பெரும்பாலான நாடுகள் ஓட்டளித்துள்ளன. சில நாடுகள் தனிப்பட்ட நிலைப்பாடுகள் எடுத்து, எதிர்க்கவும் செய்துள்ளன. வரும், செப்டம்பர் மாதம், ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில், மறுஆய்வு கூட்டம் நடைபெறும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில், இதே விஷயம் தொடர்பாக, மீண்டும் ஒரு கூட்டம் நடைபெறும். இவை அனைத்திலும், இந்தியா மிகுந்த பொறுப்புடன் அழுத்தம் கொடுத்து, இலங்கை தமிழர்களுக்கு முழு புனர்வாழ்வை ஏற்படுத்தி தரும்.

இலங்கை தமிழர்கள் விஷயத்தில், பயனுள்ள யோசனைகளை, யார் அளித்தாலும் அதை மத்திய அரசு பரிசீலனை செய்யும். தமிழக காங்கிரஸ், ஏற்கனவே இலங்கை விவகாரம் குறித்து, பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல தரப்பிலும், அழுத்தம் தருகிறது. இனியும் இது தொடரும்.

இவ்வாறு, வாசன் கூறினார்.

No comments:

Post a Comment