Wednesday, March 27, 2013

பிரிக்ஸ் மாநாட்டில் தலைவர்கள் சந்திப்பு : கூடங்குளத்தில் அடுத்த மாதம் மின் உற்பத்தி தொடங்கும் ; ரஷ்ய அதிபர் புடினிடம் பிரதமர் மன்மோகன் உறுதி!

Wednesday, March 27, 2013
டர்பன்::கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 அணு உலைகளில் முதல் யூனிட்டில் அடுத்த மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில், ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக தலா 1000 மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அணுமின் நிலையத்தை மூட கோரி, அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இதற்கிடையே, அங்கு மின் உற்பத்தியை தொடங்குவதற்காக பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கடந்த செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 2 வரை முதல் அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி நடந்தது. இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை வாரிய அதிகாரிகள் கூடங்குளத்தில் பல்வேறு கட்ட ஆய்வு மேற்கொண¢டனர்.

எனினும் சில காரணங்களால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி தொடங்குவது தாமதமானது. முதல் அணு உலையில் இருந்து இந்த மாத இறுதியில், அடுத்த மாத தொடக்கத்தில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என பல முறை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேட்டி கொடுத்தார். ஆனால் அவர் அறிவித்த தேதியில் மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் தமிழகத்தில் நிலவும் கடும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, கூடங்குளத்தில் 2 உலைகள் மூலம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள 2000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்துக்கே தர வேண்டும் என்று தமிழக அரசும், பல்வேறு அரசியல் கட்சியினரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகள் கூட்டமைப்பு (பிரிக்ஸ்) மாநாடு, தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் நடக்கிறது.

இதில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் நேற்றுமுன்தினம் டர்பன் சென்றார். அவருடன் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரும் சென்றுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்க பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள ரஷ்யா, சீனா ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்களும் டர்பன் வந்துள்ளனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் நேற்று பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது கூடங்குளம் அணுமின் நிலையம் அடுத்த மாதம் செயல்பட தொடங்கும் என உறுதி அளித்தார். கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைப்பதற்கான உள்நாட்டு அனுமதிகள் அனைத்தும் பெறப்பட்டு விட்டதாகவும், இந்த யூனிட்டுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் உறுதி அளித்தார். இதனால் விரைவில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment