Wednesday, March 27, 2013
திருச்சி::காங்கிரஸ் கட்சி பேனர்களை புலிகள் ஆதரவு மாணவர் அமைப்பினர் அடித்து உடைத்ததால், ஆத்திரம் அடைந்த காங்கிரசார், உருட்டு கட்டைகளால் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் திருச்சியில் பதற்றம் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி, கரூர், பெரம்பலூர் நாடாளுமன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் இன்று திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கலந்து கொண்டார். கூட்டத்தை முன்னிட்டு, பஸ் நிலையத்தையொட்டிய பகுதிகளில் காங்கிரஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. திடீரென காலை 10 மணிக்கு நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மாணவர் போராட்ட குழுவினர் 15 பேர் கூட்டம் நடைபெறும் இடத்தின் அருகே வந்தனர்.
அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகளை அடித்து உடைத்தனர். மண்டபத்தில் இருந்த மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், வக்கீல்கள் கராத்தே முத்துகுமார், சரவணன், வில்ஸ் முத்துக்குமார் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் அங்கு ஓடிவந்தனர். அங்கு காங்கிரஸ் பேனர்கள் அடித்து உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்த காங்கிரசார், அங்கு நடப்பட்டிருந்த காங்கிரஸ் கொடிகளை பிடுங்கி அந்த கம்பால் புலிகள் ஆதரவு மாணவர்கள், நாம் தமிழர் கட்சியினரை தாக்கினர். இதில் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். மற்றவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். இந்நிலையில் பேனர்உடைத்தவர்களை பிடிக்காமல் விட்ட போலீசாரை கண்டித்து காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 45 நிமிடம் சாலை மறியல் நடந்தது. 50க்கும் மேற்பட்ட காங்கிரசார் கைகளில் உருட்டு கட்டைகளை எடுத்து கொண்டு பேனர் உடைத்தவர்களை தேடி ஓடினர். இதனால் அந்த பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது. திண்டுக்கல் ரோடு, மதுரை ரோடு மார்க்கத்தில் செல்லும் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் ஆயுதப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்கு ஞானதேசிகன் வந்தார். அப்போது மீண்டும் தாக்குதல் நடைபெறலாம் என்ற நிலை ஏற்பட்டதால் அந்த பகுதியில் போலீசார் பெருமளவில் வரிசையாக நின்றனர். பஸ்களை வேறு வழியாக திருப்பி விட்டனர். இதனால் 1 மணி நேரம் அங்கு பதற்றம் நிலவியது. பின்னர் காங்கிரசாரை போலீசார் சமாதானம் செய்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் கூட்டம் நடைபெற்ற மண்டபத்துக்கு சென்றனர். தொடர்ந்து அங்கு போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

No comments:
Post a Comment