Thursday, March 28, 2013

இலங்கை மீதான ஆதிக்கத்தை சீனாவிடம் இழக்கும் இந்தியா!

Thursday, March 28, 2013

சென்னை::இலங்கை மீதான ஆதிக்கத்தை சீனாவிடம் இழக்கும் இந்தியா!

இலங்கை மீதான இந்தியாவின் நலன் இழக்கப்படுவதானது, சீனா தனது செல்வாக்கைப் பெருக்குவதற்கான சிறந்த வாய்ப்பாக காணப்படுகிறது.

இவ்வாறு இந்தியாவின் firstpost ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்திக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
அயல்நாடுகளுடன் எவ்வாறு கசப்பான உறவைப் பேணுவது மற்றும் அயல்நாடுகள் மீது செல்வாக்குச் செலுத்தக் கூடிய வாய்ப்புக்களைக் கூட எவ்வாறு இழப்பது என்பது தொடர்பாக ஒரு வாழிகாட்டல் நூல் இருந்திருந்தால், இலங்கை விடயத்தில் இந்தியா சரியான வகையில் நடந்து கொண்டிருக்கும்.

இலங்கைல் சீனா தனது செல்வாக்கை அதிகம் செலுத்தி வருகின்ற இந்நிலையில் இந்தியா தனக்குக் கிடைக்கும் சிறிய வாய்ப்புக்களைக் கூட தவற விடுவதாக Business Standard ஆல் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை விடயத்தில் இந்தியா தரை, கடல் மற்றும் வான் ஆகிய மூன்று வழிகளிலும் தனக்கிருந்த செல்வாக்கை இழந்துள்ளது.

இந்தியாவின் இலங்கை மீதான இராஜதந்திர சுய இலக்குகளில் ஏற்பட்டுள்ள இடைவெளியை தற்போது சீனா மிகத் துரிதமாக நிரப்பியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்தவாரம் இந்தியா இரு வேறுபட்ட பிரச்சினைக்குள் மாட்டிக் கொண்டது.

அதாவது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில்  இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் மற்றும் மத்தியில் அரசாங்கத்தை அமைத்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் விலகியமை ஆகிய இரு அழுத்தங்கள் தொடர்பில் இந்தியா முடிவெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது.

இலங்கை மீதான இந்தியாவின் நிலைப்பாட்டை சீனா தனக்கு சாதகமாக்கியுள்ளது.

இலங்கை அதன் தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக எடுக்கும் முயற்சிகளுக்கும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்படும் தீர்மானம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் சீனா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் எனவும் தற்போது சீனாவில் புதிதாக பதவியேற்றுள்ள அதிபர் ஜி ஜின்பிங் தொலைபேசி ஊடாக  இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு உறுதியளித்திருந்தார்.

இலங்கை தமிழர்கள் விவகாரம் தொடர்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்லாது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் ஏனைய அரசியற்கட்சிகளும் இந்திய மத்திய அரசாங்கம் மீது அதிக அழுத்தங்களை கொடுத்து வருகின்றன.

இந்திய மத்திய அரசாங்கம் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் அழுத்தத்தை ஈடுசெய்து தனது ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்வதற்காக  இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் சில விட்டுக் கொடுப்புக்களை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான விட்டுக்கொடுப்புக்கள் ஆபத்தை உண்டுபண்ணுகின்ற போதிலும் இந்தியா இதனைச் செய்ய வேண்டியுள்ளது.

எடுத்துக்காட்டாக, இலங்கைல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாது அதனை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க போன்ற தமிழ்நாட்டுக் கட்சிகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திடம் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

அண்மையில் தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்த இலங்கை யாத்திரிகர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை  வர்த்தக நலன்கள் மீதான தாக்குதல்கள் போன்றன சென்னையிலுள்ள  இலங்கை தூதரகம் மூடப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை அந்நாட்டு அரசாங்கம் எடுப்பதற்குத் தூண்டியுள்ளன.

இலங்கை மீதான இந்தியாவின் மூலோபாய மற்றும் வர்த்தக சார் நலன்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தை சீனா மிக இலகுவாகப் பயன்படுத்துகின்றது.

இலங்கை சமூகம் இந்தியாவுக்கு எதிராகத் திரும்பியுள்ளதுடன் சீனா மீது அதிக விருப்பத்தைக் காண்பிப்பதாகவும், இலங்கைல் வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ளும் இந்திய நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக Business Standard இன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவை இலங்கையர்கள் தமது நட்பு நாடாக பார்க்கின்ற நிலை உருவாகியுள்ளதாக இதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் மூலோபாய மற்றும் வர்த்தகசார் நடவடிக்கைகளில் சீனாவின் ஆதிக்கம் அண்மைக்காலத்தில் மிகவும் அதிகரித்து வருகிறது.

எடுத்துக்காட்டாக, சீன உதவியுடன் இலங்கையில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அம்பாந்தோட்டை துறைமுகம் கட்டப்பட்டுள்ளது.

இத்திட்டம் வர்த்தக ரீதியில் பயனற்றது என இந்தியா தட்டிக்கழித்த நிலையில் சீனா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது.

இந்தியா பாதுகாப்பு மற்றும் வர்த்தக சார் விடயங்களைக் கருத்திற் கொண்டே அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை தட்டிக்கழித்திருந்தது.

அண்மையில், சீன ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் உதவியுடன் 206 மில்லியன் டொலர்கள் செலவில் மாத்தளையில் கட்டப்பட்ட ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தை அதிபர் ராஜபக்ச உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். இத்திறப்பு விழாவில் சீன அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கொழும்பு காலி வீதிக்கு அருகில் முன்னர் இந்திய கலாசார மையம் அமைக்கப்பட்டிருந்த நிலத்தை சீன விமான உற்பத்தி நிறுவனத்திற்கு  இலங்கை கடந்த ஆண்டில் விற்றது.

 இலங்கையின் இந்நடவடிக்கையால் இந்தியா அதிர்ச்சியுற்றிருந்தது. ஆனால் இது தொடர்பில் இந்தியாவால் எதனையும் செய்ய முடியாதிருந்தது

இலங்கைக்கு சீனா 2007லிருந்து 2 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. ஆனால் இந்தியா 298.1 மில்லியன் டொலர்களை மட்டுமே வழங்கியுள்ளது.

 இலங்கையின் மீள்கட்டுமானங்கள் மீதான சீனாவின் முதலீடு அதிகரித்துள்ளதாக Business Standard இன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனப் பொறியியலாளர்கள் இலங்கையின் வீதிகள், தொடரூந்துப் பாதைகள் போன்றவற்றையும் தொலைத் தொடர்பாடல் இணைப்புக்கள், அணைக்கட்டுக்கள், வைத்தியசாலைகள், அரங்கங்கள், பாடசாலைகள், விடுதிகள், அனல் மின்நிலையங்கள் போன்றவற்றை புதிதாக நிர்மாணித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு இலங்கையின், சீனாவின் Great Wall Industry Corp உதவியுடன் முதலாவது தொடர்பாடல் செயற்கைக் கோளை அனுப்பியது.

அதிலிருந்து சீன நிறுவனம் இலங்கைடன் செயற்கைக் கோளை விண்ணுக்கு ஏவுதல் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

இது விண்வெளிக் கற்கைநெறியைக் கற்பதற்கான கல்லூரி ஒன்றையும் இலங்கையின் அமைப்பதற்கு உதவுகிறது.

தொலைத் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழினுட்ப வலைப்பின்னல்கள் போன்றவற்றை சீனா மற்றும் இலங்கை ஆகியவற்றுக்கிடையில் கட்டியெழுப்புவதற்கான உடன்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் இவ்விரு நாடுகளும் தமக்கிடையில் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான உடன்பாடுகளையும் மேற்கொண்டுள்ளன' என Business Standard அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுருக்கமாகக் கூறின் இலங்கையின் மீதான இந்தியாவின் நலன் இழக்கப்படுவதானது, சீனா தனது செல்வாக்கைப் பெருக்குவதற்கான சிறந்த வாய்ப்பாக காணப்படுகிறது.

இன்று சீனா, இலங்கையில் ஆதிக்கம் செலுத்துகிறது.

இதனால் இலங்கை மீதான இந்தியாவின் மூலோபாய மற்றும் வர்த்தக சார் நலன்கள் சீனாவிடம் கைமாறிப் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது எனக் கூறலாம். 

Business Standard and firstpost

மொழியாக்கம் நித்தியபாரதி.

No comments:

Post a Comment