Thursday, March 28, 2013
சென்னை::ஜெயலலிதா நாடகம்: ஸ்டாலின்சட்டசபையில், மாணவர்கள் போராட்டம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. இதில், தி.மு.க., எம்.எல்.ஏ., கோவி. செழியனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், தி.மு.க., வெளிநடப்பு செய்தது. தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்துக்களுக்கு, தி.மு.க.,வினர் எதிர்ப்புத் தெரிவிக்கவே, சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
வெளிநடப்பு, வெளியேற்றம் குறித்து ஸ்டாலின் கூறியதாவது: இலங்கை தமிழர்கள் பிரச்னையில், மாணவர்கள் போராட்டம் குறித்து, கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. மாணவர் தி.மு.க.,வில் பொறுப்பில் உள்ள வழக்கறிஞர் கோவி. செழியன் சிறப்பாக பேசக் கூடியவர்.
இப்பிரச்னையில், அவர் பேசினால் பொருத்தமாக இருக்கும் என்பதால், அவரை பேசச் சொன்னோம். அவதூறான வார்த்தைகளை அவர் பயன்படுத்தவில்லை. இருப்பினும், அவருக்கு பேச அனுமதி அளிக்கவில்லை. இதை கண்டித்து, வெளிநடப்பு செய்தோம். மேலும், தீர்மானத்தின் மீது, முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், திட்டமிட்டே, தி.மு.க.,வை கொச்சைப்படுத்தும் விதமாகவும், தலைவர் கருணாநிதியை அவமானப்படுத்தும் வகையிலும், தேவையற்ற கருத்துகளைக் கூறினார். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொண்டு வந்த தீர்மானத்தில், தி.மு.க., தலைவரை அவமதித்து பேசியதால் எதிர்ப்பு தெரிவித்தோம். இலங்கை பிரச்னையில், 2009ம் ஆண்டு, தி.மு.க., ஆட்சியில், எதையும் செய்யவில்லை என, முதல்வர் ஜெயலலிதா பொய் பிரசாரம் செய்கிறார். "போரில் உயிரிழப்புகள் ஏற்படுவது வாடிக்கை' என அறிக்கை வெளியிட்டவர்; இப்போது, நாடகம் ஆடுகிறார். இலங்கை பிரச்னையில், உண்மையில் யார் நாடகம் நடத்துகின்றனர் என்பது, மக்களுக்கு தெரியும். இவ்வாறு, அவர் கூறினார்.
காங்கிரஸ் ஆதரவு
சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கராஜன் : இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக, அனைத்து விதமான உதவிகளையும், மத்திய அரசு செய்து வருகிறது. ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த, அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து, இந்தியா வாக்களித்துள்ளது. இந்நிலையில், "போர்க் குற்றங்கள் தொடர்பாக, சர்வதேச விசாரணை வேண்டும். இலங்கை மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' ஆகியவற்றை காங்கிரசும் கூறிவருகிறது. எனவே, சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தை, காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால், தீர்மானத்தை கொண்டு வந்து, மத்திய அரசை குற்றஞ்சாட்டி, விமர்சித்து, முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்துக்களை, வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டசபை தலைவர் பாலபாரதி, எம்.எல்.ஏ.,க்கள் பாலகிருஷ்ணன்,
டில்லிபாபு ஆகியோர் கூறியதாவது: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு விட்டபோது, தீர்மானத்தை ஏற்கவில்லை என கூறினோம். தீர்மானத்தில், "இலங்கையை நட்பு நாடு என, அழைப்பதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும். இலங்கையில், தனி ஈழம் அமைக்க, இலங்கைத் தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில், பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இனப் படுகொலைக்கு, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது. இவற்றை, நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு நாட்டை, பிளப்பதை நாங்கள் ஏற்கமாட்டோம். எனவே, சட்டசபையில், நிறைவேற்றிய இலங்கைத் தீர்மானத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.
வைகோ பாராட்டு
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: இலங்கைத் தமிழருக்கு விடியல் ஏற்பட,
சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான, பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி, சட்டசபையில், முதல்வர் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ள தீர்மானம், வரலாற்றுப் புகழ்மிக்க சிறப்புக்கு உரியது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்துக்கு, வரலாறு பொன் மகுடம் சூட்டும். சுதந்திரத் தமிழ் ஈழம் மலரத் தான் போகிறது. இதே தீர்மானத்தை, பார்லிமென்டிலும் நிறைவேற்றும் நாள் வரும். அனைத்து உலகம், அதைச் செயல்படுத்தும் நாளும் வந்தே தீரும். விடியலின் வெளிச்சத்தைத் தரும் தீர்மானத்தை, முன் வைத்து நிறைவேற்றிய முதல்வருக்கும், தமிழக சட்டசபைக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை, நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:
Post a Comment