Thursday, March 28, 2013
சென்னை::இலங்கைக்கு எதிரான போராட்டம் வலுத்து வரும் நிலையில், சென்னையில் உள்ள, இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனத்தின், பெயர் பலகை, துணி போட்டு மறைக்கப்பட்டது. சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில், விஜயா டவர் உள்ளது. இதில், முதல் மற்றும் இரண்டாவது தளங்களில், இலங்கை அரசுக்குச் சொந்தமான, விமானச் சேவை நிறுவனம் செயல்படுகிறது. சென்னையில் இருந்து, இலங்கைக்கு செல்லவும், வேறு சில நாடுகளுக்கு பயணம் செய்யவும், இந்த அலுவலகத்தில், விமான பயணச் சீட்டு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில், இலங்கை அரசுக்கு எதிராக, பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களால், இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதால், அந்நிறுவனத்தின் பெயர் பலகை, துணி போட்டு மறைக்கப்பட்டுள்ளது. அலுவலகம் வழக்கம் போல் செயல்படுகிறது. பாதுகாப்புக்காக, இரண்டு எஸ்.ஐ.க்கள் தலைமையில், இரவில், 40 போலீசார், பகலில், 20 போலீசார் என, 24 மணி நேரமும் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்னர். அலுவலகத்துக்கு வரும் நபர்கள், தீவிர சோதனைக்கு உட்படுத்தி, விவரங்கள் எழுதி வாங்கிய பின்னரே, உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

No comments:
Post a Comment