Thursday, March 21, 2013
இலங்கை::ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பதற்கும் அந்தத் தீர்மானம் மீது சில திருத்தங்களைக் கொண்டுவருவதற்கும் இந்தியாவினால் எடுக்கப்படும் நிலைப்பாடு துரதிருஷ்டவசமாகலாம்" என்று ஐநா மன்றத்தின் முன்னாள் துணைத் தலைமைச் செயலருமான டாக்டர் ஜயந்த தனபால தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தீர்மானத்தினால் இலங்கை அரசும் தமது நாட்டின் பெரும்பான்மை மக்களும் வருத்தமடைவார்கள்" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நீண்ட காலமாக நெருங்கிய உறவுகள் இருந்திருக்கின்றன. புவிசார் அரசியல் காரணமாகவும் இரு நாடுகளும் பிரிக்கமுடியாமல் பின்னிப் பிணைந்திருக்கின்றன.இந்த சுமுக உறவில் துரதிருஷ்டவசமாக சில பிறழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் சிறுபான்மையாக இருக்கின்ற ஒரு இனம் பாக்கு நீரிணைக்கு அப்பால் இருக்கும் மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கிறது. அது எங்கள் இருநாடுகளையும் இணைக்கும் ஒரு விஷயமாக இருக்கவேண்டும் அது பிரிக்கும் விஷயமாக இருகக்கூடாது' என்றும் தெரிவித்துள்ளார்.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தி இலங்கையின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க சதி செய்ததாகவும் விடுதலைப்புலிகள் உட்பட இலங்கையின் தீவிரவாதக் குழுக்களுக்கு இந்தியா பயிற்சியும் ஆயுதமும் வழங்கியதாகவும் அவர் கூறினார். விடுதலைப்புலிகள் இயக்கதின் எஞ்சியிருக்கும் சக்திகளோடு தொடர்பு கொண்டிருக்கும் தமிழக சக்திகள் சிலரை திருப்திபடுத்தவே இந்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் போருக்குப் பின்னர் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்ததாகவும் அடிப்படை வாழ்வாதாரம் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் பல்வேறு முன்னேற்றங்களை எட்டியிருப்பதாகவும் ஜயந்த தனபால சுட்டிக்காட்டினார்.
காணாமல்போனோர் பிரச்சினை, புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களின் புனர்வாழ்வு உட்பட பல விஷயங்களில் முன்னேற்றம் காணப்படவேண்டியிருக்கிறது. ஆனால் 'இனப்படுகொலை' போன்ற கருத்துக்கள் எல்லாம் மிகவும் மிகைப்படுத்தப்பட்டவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியா ஒரு பெரிய நாடு. தமிழ் நாட்டில் ஏற்பட்டிருக்கும் உணர்வுகளால் இந்தியா போன்ற ஒரு பெரிய வளர்ந்து வரும் ஆசியப் பொருளாதாரத்தின் வெளியுறவுக்கொள்கை பாதிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவினால் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment