Saturday, March 23, 2013
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தம்மால் ஆரம்பத்தில் சமர்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான வரைபின் கடுந்தொனி குறைக்கப்பட்டிருந்ததாக மனித உரிமை அமைப்புக்கள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்களை அமெரி்க்கா நிராகரித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து பீ.பீ.சி. உலக சேவைக்கு அளித்த நேர்காணலின்போது அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் கூறியுள்ளார்.
இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கை சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அந்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருந்ததாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
நிலையான சமாதானம் மற்றும் சபீட்சத்தை ஏற்படுத்துவதற்காக இனங்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கும் யுத்த குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கும் இலங்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
பிரேரணையின் பிரகாரம் இலங்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறும் பட்சத்தில் சர்வதேச சமூகம் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கும் என பீ.பீ.சியினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமெரிக்காவின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து இந்த தருணத்தில் எதனையும் கூறமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
உறுதியளிக்கப்பட்டவாறு எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வட மாகாண தேர்தலை நடத்தி, அதிகாரப் பகிர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு ஐ.நாவின் பிரேரணை மிக முக்கியமானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்காக தென்னாபிரிக்கா அல்லது வேறு ஏதேனுமொரு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வகிக்க முன்வருமாயின் அதற்கு தமது நாடு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் பிளேக் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட பிரேரணையை மேலும் வலுவூட்டுவதற்கு இறுதித் தருணத்தில் இந்தியாவினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு அமெரிக்கா இணங்கவில்லை என ''த ஹிந்து'' ஊடகம் தகவல் வெளியிட்டிருந்து.
இந்த தகவலின் உண்மைத் தன்மை குறித்து கருத்து எதனையும் கூறறுத்துள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக், பிரேரணையை ஐ.நாவில் சமர்ப்பிக்கும் ஒட்டுமொத்த நடவடிக்கையின்போதும் இந்தியாவுடன் அமெரிக்கா நெருக்கமாக செயற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட சில திருத்தங்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



No comments:
Post a Comment