இலங்கை::கேள்வி : தமிழ்நாட்டில் இலங்கையர் மீதும் பெளத்த மகா சங்கத்தினர் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பின்னணியில் பொதுமக்கள் இருந்தார்களா? அல்லது திட்டமிட்ட ஒரு குழு செயற்பட்டதா?
பதில்: சிறு குழுக்களே இத்தகைய தாக்குதல்களை ஏதோ ஒரு குறுகிய நோக்கத்துடன் பிரச்சினைகளை உருவாக்கும் எண்ணத்துடன் மேற்கொண்டுள்ளன. இலங்கையில் இந்தியர்களுக்கு எதிராக இது போன்ற பதிலடி ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் இன ரீதியிலான தாக்குதலை உருவாக்கும் எண்ணத்துடன் இவர்கள் செயற்பட்டிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இதுதான் தாக்குதல் நடத்தியவர்களின் நோக்கமொன்பதை நாம் புரிந்து கொண்டுள்ளேன்.பொதுமக்கள் இத்தாக்குதல்களை கண்டிக்கிறார்கள். குறிப்பாக பெளத்த பிக்குமாருக்கு எதிரான தாக்குதலை தென்னிந்திய மக்கள் கண்டிக்கிறார்கள். தென்னிந்திய தமிழர்கள் இத்தாக்குதல்களை கண்டித்து இத்தகைய கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டுமென்று கேட்டுள்ளார்கள். இதுதான் சென்னையில் உள்ள நிலமையாகும். தஞ்சாவூரிலும், சென்னையிலும் இரண்டு பெளத்த பிக்குமார் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் இடம்பெற்றது.
தஞ்சாவூரில் பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து தாக்குதலுக்குள்ளானவர்களை காப்பாற்றி அவர்களை விமான நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். வீடியோ தொலைக்காட்சி படங்களை ஆதாரமாக வைத்து இந்த தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளார்கள். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு எதிராக பொலிஸார் குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளார்கள். மேலும் மூன்று சந்தேகநபர்கள் தலைமறைவாகியிருக்கிறார்கள். இப்போது பொலிஸார் அவர்களை தேடி வருகிறார்கள்.
சென்னை மத்திய ரயில் நிலையத்தில் சங்கைக்குரிய வங்கீஸா தேரர் மீதான தாக்குதல் தொடர்பாக பொலிஸார் கடந்தவாரம் மூன்று பேரை கைது செய்தனர். தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இம்மூவரும் விசாரணையின் பின்னர் புழல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். பொலிஸார் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கேள்வி : இந்தத் தாக்குதலுக்கு பின்னணியில் இருந்தவர்களை அடையாளம் கண்டுள்Zர்களா? இவர்கள் ஏதாவது அரசியல் குழுக்களை சார்ந்தவர்களா?
பதில்: இந்த விசாரணையின் மூலம் இத்தாக்குதலின் பின்னணியில் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்திற்கு ஆதரவான சிறிய அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் பின்னணியில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட வில்லை. அவர்கள் இது குறித்து அதிருப்தி அடைந்துள்ளார்கள்.
கேள்வி : இத்தகைய தாக்குதல்களை மேற்கொள்வதற்கு அங்கிருந்த இலங்கைக் குழுவினர் ஆத்திரமூட்டக்கூடிய வகையில் நடந்து கொண்டார்களா?
பதில்: இல்லவே, இல்லை. அவர்கள் எவரையும் ஆத்திரமடையக்கூடிய வகையில் நடந்து கொள்ளவில்லை. இந்தத் தாக்குதல் சம்பவங்கள் எப்போதாவது ஓரிடத்தில் நடைபெறும் சம்பவங்களில் ஒன்றாகும். இத்தகைய தாக்குதல்கள் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவைக் கூட்டத்தின் செல்வாக்கை ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய சம்பவங்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் இடம்பெற்றன. ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் இத்தகைய சம்பவங்கள் தானாகவே ஓய்ந்துவிடும். இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக் கொண்டுவருவதற்காகவும் அரசியல் பிரசாரங்களை மேற்கொள்வதற்காகவுமே இத்தகைய சம்பவங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
கேள்வி : தற்போதைய பதற்ற நிலையை இல்லாமல் செய்வதற்கு எத்தகைய இராஜதந்திர செயற்பாடுகளை செய்துகொண்டு வருகிaர்கள்?
பதில்: இலங்கை யாத்திரிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுதல் மற்றும் அவர்களின் பாதுகாப்பு குறித்து நாம் ஏற்கனவே இந்திய மத்திய அரசாங்கத்துடனும், தமிழ் நாடு மாநில அரசாங்கத்துடனும் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.
தமிழ் நாடு பொலிஸாரும் அரசாங்கமும் சென்னைக்கு வரும் இலங்கையருக்கு பூரண பாதுகாப்பு அளிக்கப்படும் என்று எமக்கு உறுதியளித்துள்ளனர். சென்னையில் அமைந்துள்ள இலங்கை நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நாம் கேட்டுள்ளோம். ஏற்கனவே இலங்கை வங்கிக் கிளையில் உத்தியோகத்தர்கள், ஸ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் காரியாலயத்தின் உத்தியோகத்தர்கள், மாபோதி சங்க யாத்திரிகர்கள் தங்குமிடம் ஆகியவற்றுக்கு ஏற்கனவே பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கையின் பிரதி உயர் ஸ்தானிகர் காரியாலயத்திற்கும் அங்கிருக்கும் பிரதி உயர் ஸ்தானிகரின் இல்லத்திற்கும் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்ஸ்தானிகராலயத்தில் சுமார் 20 உத்தியோகத்தர்கள் கடமை புரிகிறார்கள். அவர்களுடன் இலங்கை வங்கி உத்தியோகத்தர்களும் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் காரியாலயத்தில் உத்தியோகத்தர்களும் இருக்கிறார்கள். இவர்களுடன் மாபோதி நிலையத்தின் தங்குமிடத்தில் இலங்கையில் இருந்து வரும் பெருமளவு யாத்திரிகர்கள் தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கும் நாம் பாதுகாப்பைத் தருமாறு கேட்டுள்ளோம். புத்தகயாவுக்கு செல்லும் பெளத்த யாத்திரிகர்கள் பெரும்பாலும் சென்னை மார்க்கமாகவே அங்கு செல்கிறார்கள். மாபோதி சங்கத்துக்கு கடந்த இரண்டு மூன்று வாரங்களாக ஜெனீவா மாநாட்டை காரணமாக வைத்து நாம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். சென்னை மத்திய ரயில் நிலையத்தில் பெளத்த பிக்கு ஒருவர் தாக்கப்பட்டதை அடுத்து எமது வெளிவிவகார அமைச்சு தமிழ் நாட்டுக்கு செல்பவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். நான் சென்னையில் பொலிஸ் திணைக்களத்துடனும் மாநில அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் தொடர்பை வைத்திருந்தேன். புது டில்லியில் உள்ள எமது உயர் ஸ்தானிகராலயம் இந்திய வெளிவிவகார அமைச்சுடன் இது குறித்து தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் உள்ள பொலிஸார் எங்களுடன் பூரணமாக ஒத்துழைக்கிறார்கள். ஆயினும் இப்போது இடம்பெறும் சம்பவங்கள் குறித்து நாம் மிகவும் அவதானமாக இருக்கிறோம்.
கேள்வி : பெளத்த பிக்கு ஒருவர் உடல் ரீதியில் தாக்கப்படுவதை தொலைக்காட்சியின் மூலம் பார்த்த இலங்கை மக்கள் மிகவும் வேதனையும் ஆத்திரமும் அடைந்துள்ளனர்?
பதில்:- நாம் இவர்களின் துஷ்ட செயல்களுக்கு பலியாகக் கூடாது இத்தகைய வன்முறைகளும் துஷ்ட செயல்களும் தமிழ் நாட்டு மக்களின் அங்கீகாரத்துடன் மேற்கொள்ளப்படவில்லை. எல்.ரி.ரி.ஈ யை ஆதரிக்கும் சிறிய தீவிரவாத குழுக்களே இத்தகைய வன்முறைகளுக்கு பின்னணியில் இருந்து இலங்கையில் நற்பெயருக்கு தீங்கிழைக்கும் செயற்பாடுக ளில் ஈடுபடுகின்றனர். இலங்கையும் இந்தியாவும் பல்லாண்டு காலம் நட்புறவுடன் இருந்து வரும் அயல் நாடுகளாகும். இவ்விரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை சீர்குலைப்பதே இவர்களின் நோக்கமாகும். இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இந்த வன்முறைகள் குறித்து புதுடில்லியில் உள்ள உயர் ஸ்தானிகராலயம் மூலமும் சென்னையில் உள்ள பிரதி உயர் ஸ்தானிகராலயம் மூலமும் இந்திய அரசாங்கத்துக்கு தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment