Wednesday, March 20, 2013
சென்னை::இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க கோரி, தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், சட்டம் - ஒழுங்கு பாதிப்பை தடுக்க, தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. குற்றப் பிரிவு உட்பட அனைத்து சிறப்பு பிரிவு போலீசாரும், சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்ற, அதிகாரிகள், வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், இந்த போராட்டம் காரணமாக, போலீசார் விடுப்பில் செல்ல, திடீர் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக, ஐ.நா., சபையில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க கோரி, தமிழகம் முழுவதும், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
தாக்குதல்: இதைச் சாதகமாக பயன்படுத்தி, தஞ்சை பெரிய கோவில், சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில், இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்த, புத்த மதத்தை சார்ந்தவர்கள் மீது, "லெட்டர் பேடு' கட்சியினர், தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவங்களை அடுத்து, தமிழகம் முழுவதும், போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரி, அனைத்து கலைக் கல்லூரி, இன்ஜினியரிங், மருத்துவக் கல்லூரி, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு மட்டுமின்றி, அவற்றில் செயல்படும் விடுதிகளுக்கும், விடுமுறை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், மாணவர்கள் ஆங்காங்கே, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சாலைமறியல், ரயில் மறியல், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுதல் உள்ளிட்ட போராட்டங்களில், ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தேவையான நடவடிக்கைகளை, போலீசார் மேற்கொண்டு வந்த போதிலும், போலீஸ் பற்றாக்குறை காரணமாக, போதிய பாதுகாப்பு அளிப்பதில், தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாணவர்கள், "லெட்டர் பேடு' தமிழ் அமைப்புக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த, சட்டம் - ஒழுங்கு பிரிவு போலீசாருடன், குற்றப் பிரிவு, நில அபகரிப்பு மீட்பு குழு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, மாநகர, மாவட்ட குற்றப் பிரிவு, வீடியோ பைரசி, வணிக குற்றப் பிரிவு உள்ளிட்ட, சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் போலீசார், அதிகாரிகள், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். விடுப்பில் சென்றவர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், போலீஸ் கமிஷனர்கள், எஸ்.பி.,க்கள், துணை கமிஷனர்கள், போலீஸ் மைக், மொபைல்போன் மூலம், வாய்மொழி உத்தரவை பிறப்பித்தனர். இதனால், நேற்று முதல், சிறப்பு பிரிவு போலீசார் அனைவரும், சீருடையில் பணியாற்றி வருகின்றனர்.
போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடுவதை அடுத்து, போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். சட்டம் - ஒழுங்கு பிரிவு போலீசார் மட்டுமின்றி, பிற பிரிவு போலீசாரும், சட்டம் - ஒழுங்கு பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊர்க்காவல் படை, போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர்களையும், முக்கிய அலுவலகங்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment