Friday, March 22, 2013
சென்னை::தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியா அரசு இலங்கை தமிழர் பகுதியில் மறு குடியமர்த்தல், மற்ற பல உதவிகளை செய்து வருவதையும் கோடிட்டு காட்டிவிட்டு எல்லோரும் சமம் என்கிற சட்டத்தின் மாட்சிமையையும், சம உரிமையையும் இலங்கையில் ஏற்பட வேண்டும் என்பதையும் இந்தியா, ஐக்கிய நாட்டு சபையில் எடுத்துரைத்திருக்கிறது.
25 நாடுகள் ஆதரித்து வாக்களித்தும் 13 நாடுகள் எதிர்த்து வாக்களித்தும், 8 நாடுகள் பங்கேற்காமல் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை வாழ் தமிழர்களுக்கு மறுவாழ்வு மலரும் என நம்புகிறேன். மனித உரிமை மீறலுக்கான தவறுகள் அடையாளம் காட்டப்பட்டு, சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
போரின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கான தீர்வை சர்வதேச மன்றங்களின் மூலமாகத்தான் தீர்வு காண முடியும் என்றாலும், இலங்கை வாழ் தமிழ் மக்களுக்காக எல்லா உதவிகளையும் இந்தியா தொடர்ந்து செய்யும்.
அதுமட்டுமல்லாமல் அரசியல் சம உரிமையை இலங்கை தமிழர்களுக்கு மைய அரசு பெற்றுத் தரும் என்கிற நம்பிக்கையோடு நாம் இருப்போம். காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையும் இலங்கை தமிழர்களுடைய நல்வாழ்விற்கு நேசக்கரம் நீட்டி உதவி புரிந்தவர்கள் என்பதும், இலங்கை தமிழர்களுக்கான உரிமைகளை காங்கிரஸ் தலைமையிலான இந்த அரசு உறுதியாக பெற்றுத் தரும் என்பதை ஒருநாள் இந்த நாடு அறியும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment