Wednesday, March 20, 2013

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடக்கும் தொடர் போராட்டங்களால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று அவசர ஆலோசனை!

Wednesday, March 20, 2013
சென்னை::இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடக்கும் தொடர் போராட்டங்களால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று அவசர ஆலோசனை நடத்தினார். ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், அங்கு ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் அனைத்து கல்லூரி மாணவர்களும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கடந்த சனிக்கிழமை முதல் கலை கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. ஆனாலும் தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடந்து வருகிறது.

மாணவர்கள் போராட்டத்தை அடுத்து தற்போது வக்கீல்கள், வியாபாரிகள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும் களம் இறங்கி உள்ளது. இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு சுற்றுலா வந்த சிலர் தாக்கப்பட்டனர். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளன. இது போன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை செயலாளர் ராஜகோபால், தமிழக டிஜிபி ராமானுஜம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெறும் தொடர் போராட்டங்கள், அதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

No comments:

Post a Comment