Tuesday, March 12, 2013

கடைகளை அடைக்க "டெசோ' கட்டாயப்படுத்துகிறது: கமிஷனரிடம் வணிகர் சங்க பேரவை புகார்!

Tuesday, March 12, 2013

சென்னை::கடைகளை மூடச்சொல்லி,"டெசோ' அமைப்பினர், கட்டாயப்படுத்துவதாக, போலீஸ் கமிஷனரிடம், வணிகர் சங்க பேரவையினர் புகார் செய்துள்ளனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் , போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்: இலங்கையில் நடந்த, இனப்படுகொலை தொடர்பாக, இன்று டெசோ அமைப்பு நடத்த இருக்கும், பொது வேலை நிறுத்தத்தின் போது, கடைகளை அடைக்க வியாபாரிகளை கட்டாயப்படுத்த வேண்டாம் என, பேரவை சார்பில், டெசோ அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால், பெரும்பாலான பகுதிகளில், கடை, கடையாக சென்று, துண்டு பிரசுரம் வினியோகம் செய்து, கடைகளை அடைக்க வற்புறுத்தி வருகின்றனர். வேலை நிறுத்த நாளன்று, கடைகளை திறந்து வைத்திருக்கும் பட்சத்தில், கலாட்டா செய்ய முற்படுவர் என, அஞ்சுகிறோம். இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது, அமெரிக்காவும், அப்போது, மத்திய அரசில் அங்கம் வகித்த, தி.மு.க.,வும் மவுனம் சாதித்தன. தற்போது, ஐ.நா. சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருவதற்கும், அதற்கு, அழுத்தம் கொடுப்பதற்காக, டெசோ அமைப்பு வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதற்கும் சுயநலமும், அரசியலும் தான் காரணம். இந்த அரசியல் விளையாட்டில், வணிகர்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது என, வணிகர் சங்க பேரவை முடிவு செய்துள்ளது. எனவே தான், கடைகளை அடைக்க சொல்லி வணிகர்களை கட்டாயப்படுத்த வேண்டாம் என, டெசோ அமைப்புக்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால், வணிகர்களின் விருப்பத்துக்கு மாறாக, கட்டாயப்படுத்தி, கடைகளை அடைக்க செய்ய முயல்வது, சட்ட விரோத செயல் ஆகும். எனவே, வணிகர்கள், கடைகளை திறந்து வியாபாரம் செய்ய தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment