Tuesday, March 12, 2013
தூத்துக்குடி::இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த, தூத்துக்குடி மீனவர்கள், 16 பேர், எட்டு நாட்களுக்குப் பின், நேற்று விடுதலை செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம், சுற்றுப் பகுதியைச் சேர்ந்த, 16 மீனவர்கள், மார்ச் 3ல், மன்னார்வளைகுடா அருகே, இலங்கை கடல்பகுதியில், அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டனர்; மூன்று விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மார்ச் 4ல், புத்தளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீர்க்கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி குடும்பத்தினர், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, இரு நாட்டு அதிகாரிகளும் தொடர்ந்து பேசினர். விசாரணையில், கடல் எல்லை கடந்ததில், உள்நோக்கம் இல்லை என்பது தெளிவானது. இதையடுத்து, எட்டு நாட்களுக்குப் பின், நேற்று காலை, 16 மீனவர்களும், நீர்க்கொழும்பு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இத்தகவலை, கலெக்டர் ஆஷிஷ்குமார் உறுதி செய்தார். மீனவர்களை அழைத்துவரும் இலங்கை கடற்படையினர், மணப்பாடு அருகே, இந்திய கடல் பகுதியில், நம் கடலோர காவல் படையிடம் ஒப்படைப்பர். இன்று இரவு அல்லது நாளை காலை, தூத்துக்குடி அழைத்து வரப்படுவர்.

No comments:
Post a Comment