Sunday, March 31, 2013

நாளை ஏப்ரல் 1... ரொம்ப சூதானமா இருந்துக்கங்கப்பு...!!!

Sunday, March 31, 2013
சென்னை::முட்டாள்கள் தினம் என்று அழைக்கப்படும் ஏப்ரல் 1ம் தேதி நாளை. இதனால் பலரும் பல ரூபங்களில் உங்களை ஏமாற்றலாம். எனவே ரொம்ப கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

உலகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதியை முட்டாள்கள் தினம் என்று கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் பொய்யான தகவல்களைக் கூறி ஒருவரை ஒருவர் ஏமாற்ற முயல்வது சகஜம்.

மேலும் வதந்தி பரப்புவதற்கும் இந்த நாள்தான் உகந்தது என்பது மக்களின் கருத்தாகும்.

முதன் முதலில் பிரான்ஸில்தான் இந்த ஏப்ரல் 1ம் தேதியை முட்டாள்கள் தினமாக கொண்டாடியுள்ளனர். உண்மையில் இது முட்டாள்கள் தினமாக முன்பு இருந்ததில்லை. அதாவது 16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகள் பலவும் ஏப்ரல் 1ம் தேதியைத்தான் புத்தாண்டாக கருதி அனுசரித்து வந்தன. 1562ம் ஆண்டுதான் கிரகெரியல் காலண்டரை ஏற்று ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக அறிவித்தார் அப்போதைய போப்பாண்டவர் கிரகெரி.

ஆனால் இந்த புதிய புத்தாண்டை ஐரோப்பிய மக்கள் உடனடியாக ஏற்கவில்லை. ஒவ்வொரு நாடாக ஜனவரி 1க்கு மெதுவாக மாறி வந்தன. இங்கிலாந்து நாடானது 1752ம் ஆண்டில்தான் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றது.

இந்த நிலையில் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்காமல் ஏப்ரல் 1ம் தேதியையே தொடர்ந்து புத்தாண்டு தினமாக கடைப்பிடித்து வந்த நாடுகளை ஐரோப்பிய நாடுகள் முட்டாள்கள் என்று கிண்டலடிக்க ஆரம்பித்தன. இதையடுத்தே ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் போல மாறியது.

வரலாறு எப்படியோ இருக்கட்டும்.. நாளைக்கு நீங்க முட்டாளாகக் கூடாது. பார்த்து சூதானமாக இருந்துக்கங்க, அவ்வளவுதான்.

No comments:

Post a Comment