Saturday, February 09, 2013
திண்டிவனம்::திண்டிவனம் அருகே தண்டவாளம் உடைந்து கிடந்தது. வெடி வைத்து தகர்க்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுவை, செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை சேது எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. காலை 7.30 மணியளவில் திண்டிவனம் அடுத்த மேல்பேட்டையை கடந்தபோது, தண்டவாளத்தில் வழக்கத்துக்கு மாறாக பயங்கர சத்தம் கேட்டது. ரயிலும் பயங்கரமாக குலுங்கியது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து எழுந்தனர். விபத்து நிகழ்ந்து விட்டதோ என நினைத்து அதிர்ச்சி அடைந்தனர். தண்டவாளத்தில் சத்தம் கேட்டது குறித்து இன்ஜின் டிரைவர் உடனடியாக திண்டிவனம் நிலைய அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்.
அப்போது மேல்பேட்டை நோக்கி புதுவை எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. உடனடியாக இன்ஜின் டிரைவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் ரயிலின் வேகத்தை குறைத்தார். மேல்பேட்டை 119-வது கம்பம் அருகே ரயில் நிறுத்தப்பட்டது. டிரைவர் கீழே இறங்கி சென்று பார்த்தார். அங்கு தண்டவாளம் உடைந்து கிடந்தது. 6 சென்டி மீட்டர் நீளத்துக்கு தண்டவாளமே இல்லை. சிலிப்பர் கட்டைகளும் தூள் தூளாக சிதறிக் கிடந்தது. இதுகுறித்து, திண்டிவனம் ரயில் நிலைய அலுவலருக்கு டிரைவர் தகவல் தெரிவித்தார். திடீரென ரயில் நிறுத்தப்பட்டதால் திடுக்கிட்ட பயணிகள், இறங்கி சென்று பார்த்தனர். தண்டவாளம் உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வெடி வைத்து தண்டவாளம் தகர்க்கப்பட்டது போல இருந்ததாக பயணிகள் கூறினர். ரயில் எப்போது புறப்படும் என தெரியாததால் பயணிகளில் சிலர், கீழே இறங்கி வயல்வெளி வழியாக நடந்து சென்று பஸ்சில் ஏறி சென்னை சென்றனர்.
திண்டிவனம் உதவி பொறியாளர் மனோகர் தலைமையில் ஊழியர்கள் விரைந்து வந்து உடைந்த தண்டவாளத்தை தற்காலிகமாக சரி செய்தனர். இதையடுத்து 8.20 மணிக்கு புதுவை எக்ஸ்பிரஸ் 10 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. புதுவை எக்ஸ்பிரசை தொடர்ந்து வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டிவனத்தில் நிறுத்தப்பட்டது. தற்காலிக சீரமைப்புக்கு பிறகு அந்த இடத்தில் ரயில்கள் 10 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டன. தண்டவாளம் உடைந்து கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்சே வருகையை எதிர்த்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபக்சேக்கு எதிர்ப்பு தெரிவித்து யாரேனும் வெடி வைத்து தண்டவாளத்தை தகர்த்தார்களா அல்லது வேறு காரணமா என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment