Saturday, February 09, 2013
புதுடெல்லி::கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி பாராளுமன்றம் மீது 5 தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு படையினரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு பாராளுமன்றத்துக்குள் நுழைந்தனர்.
ஆனால் பாதுகாப்பு படை வீரர்கள் துணிச்சலுடன் செயல்பட்டு 5 தீவிரவாதிகளையும் சுட்டு வீழ்த்தினர். இதனால் மிகப்பெரிய உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டது. தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் 7 பாதுகாப்பு படை வீரர்கள் பாராளுமன்ற ஊழியர்கள் உள்பட 12 பேர் பலியானார்கள்.
இந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த அப்சல்குரு அடுத்த சில நாட்களில் டெல்லியில் கைது செய்யப்பட்டான். காஷ்மீரைச் சேர்ந்த இவன் ஜெய்ஸ்-இ-முகமது என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவன். காஷ்மீர் விடுதலை கோரிக்கையை முன் வைத்து பாகிஸ்தானின் லஸ்கர்- இ-தொய்பா தீவிரவாதிகளுடன் சேர்ந்து டெல்லி பாராளுமன்ற கட்டிடத்தை தகர்க்க சதித் திட்டம் தீட்டியது தெரிய வந்தது.
அப்சல்குரு மீது டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தாக்குதல் நடந்த ஒரு வருடத்தில் 2002-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந்தேதி அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி திங்ரா தீர்ப்பு கூறினார். தூக்கு தண்டனையை 2003-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டு உறுதி செய்தது. தீர்ப்பை எதிர்த்து அப்சல்குரு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தான். 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ந்தேதி தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு அப்சல் குருவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி அப்சல்குருவை தூக்கில் போட தேதி குறிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு அப்சல்குருவின் மனைவி தபசும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். இதனால் அப்சல்குருவை தூக்கில் போடுவது நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த கருணை மனு அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பட்டீல் பரிசீலனைக்கு வந்தது. அவர் உள்துறை அமைச்சகத்தின் கருத்தை அறிவதற்காக கருணை மனுவை அனுப்பி வைத்தார். அப்போது உள்துறை மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் கருணை மனுவை நிராகரிக்கலாம் என்று ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்தார்.
ஆனால் கருணை மனு மீது உடனடியாக பிரதீபா பட்டீல் முடிவு எடுக்கவில்லை. இந்த நிலையில் பிரணாப்முகர்ஜி ஜனாதிபதியானதும் நிலுவையில் இருந்த அப்சல்குரு, மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாப் உள்பட 7 பேரின் கருணை மனுக்களை உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு திருப்பி அனுப்பினார்.
2012 ஆகஸ்ட் 1-ந்தேதி உள்துறை மந்திரியாக பொறுப்பேற்ற சுசில்குமார் ஷிண்டே 7 கருணை மனுக்களையும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்தார். இதில் முதல் நடவடிக்கையாக 2012 நவம்பர் 21-ந்தேதி மும்பை ஜெயிலில் கசாப் தூக்கில் போடப்பட்டான். இதைத்தொடர்ந்து அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் என்று பாரதீய ஜனதா கோரிக்கை விடுத்தது.
கடந்த 6 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கடந்த 3-ந்தேதி நிராகரித்து உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் அனுப்பினார். இதைத்தொடர்ந்து அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றும் உத்தரவு டெல்லி திகார் ஜெயில் சூப்பிரண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு திகார் ஜெயிலில் அப்சல்குரு தூக்கில் போடப்பட்டான். முன்னதாக டெல்லி திகார் ஜெயிலில் 3-ம் எண் அறையில் அடைக்கப்பட்டு இருந்த அப்சல்குருவிடம் தூக்கில் போடப்படும் தகவலை ஜெயில் அதிகாரிகள் முறைப்படி தெரிவித்தனர். தூக்கில் போடும் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
இன்று காலை 7.30 மணி அளவில் அப்சல்குருவை ஜெயில் காவலர்கள் ஜெயில் வளாகத்தில் உள்ள தூக்கு மேடைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மேடையில் நிறுத்தப்பட்டதும் தண்டனையை நிறைவேற்றும் ஊழியர் ஒருவர் அப்சல்குரு முகத்தை கறுப்பு துணியால் மூடி கழுத்தில் சுறுக்கு கயிறை மாட்டினார்.
சரியாக 8 மணிக்கு ஜெயில் சூப்பிரண்டு கையை உயர்த்தி சைகை காட்டியதும் அப்சல்குரு நின்றிருந்த தூக்கு மேடையின் பலகையை ஊழியர் உருவினார். உடனே அப்சல்குரு கழுத் தில் கயிறு இறுகிய நிலையில் அந்தரத்தில் தொங்கினான்.
அப்போது மாஜிஸ்திரேட்டு, டாக்டர், ஜெயில் உயர் அதிகாரிகள் அங்கு இருந்தனர். அவர்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. சில நிமிடங்களில் அப்சல் குரு உயிர் பிரிந்தது. உடனே டாக்டர் அப்சல்குருவை பரிசோதித்து உயிர் பிரிந்ததை உறுதி செய்தார். இதையடுத்து அவனது உடல் தூக்கு மேடையில் இருந்து இறக்கப்பட்டது.
அப்சல்குரு இறந்ததற்கான சான்றிதழை டாக்டர் வழங்கினார். அது ஜெயில் அதிகாரிகள் மூலம் மாஜிஸ்திரேட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்சல்குரு தூக்கில் போடும் தகவல் இன்று காலையில் முன் கூட்டியே அவனது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. உறவினர்கள் சம்மதத்துடன் அப்சல்குருவின் உடல் திகார் ஜெயில் வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.
அப்சல்குரு தூக்கிலிடப்பட்ட தகவலை உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் வெளியிட்டார். உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டேயும் உறுதி செய்தார். பாராளுமன்றம் தாக்கப்பட்டு 11 ஆண்டுகளுக்கு பிறகு அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment