Friday, February 08, 2013
அவனியாபுரம்::கன்னியாகுமரி கடலுக்குள் மீன்பிடிக்க சென்று, சுழல்காற்றில் சிக்கி, நான்கு நாட்களாக கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள், இலங்கையிலிருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்தனர். குமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீனவர்கள் வருவேல் பிள்ளை, 63, அமல்ராஜ், 34, சேவியர், 49, ஜோய், 34. இவர்கள் நால்வரும் ஜன., 30 ல், ஒரு படகில் சென்று மீன் பிடித்தபோது, கடலில் சுழல்காற்றில் சிக்கி தத்தளித்தனர். அவர்களை காணாமல் உறவினர்கள் தவித்தனர். இந்நிலையில், அம்புரோஸ், சேவியர், ஜோய் மட்டும் நேற்று மதியம் 3.30 க்கு இலங்கையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தனர்.
அவர்களை கன்னியாகுமரி கடல்வளம் மீன்துறை உதவி இயக்குனர் ஐசக், ஆய்வாளர் நடராஜ், மீனவர் மகளிர் மாநில தலைவர் லீமாரோஸ், தெற்காசிய மீனவர் பாதுகாப்பு பேரவை பொதுச் செயலாளர் சர்ச்சில், நிரபராதி விடுதலை மீனவர்களின் கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம் வரவேற்றனர். மீனவர்கள் கூறியதாவது: ஜன., 30 ல் கரையிலிருந்து பல கடல் மைல் தூரத்தில், இந்திய எல்லைக்குள் வலை விரித்தோம். இரவு சுழல் காற்று வீசியதில் படகு கவிழ்ந்தது. சேதமுற்ற படகை பிடித்துக் கொண்டு, நால்வரும் தண்ணீரில் இரவு, பகலாக ஜன., 4 வரை தத்தளித்துக் கொண்டிருந்தோம். கடல் நீரை தான் குடித்தோம்.
இரண்டாவது நாளில் சற்று தூரத்தில் ஒரு கப்பல் சென்றது. நாங்கள் சைகை செய்தது தெரியாததால், கப்பல் நிற்கவில்லை. மறுநாள் சென்ற இரு படகுகளும் நிற்கவில்லை. எங்கள் உடலில் காயங்கள் ஏற்பட்டன. எங்களுடன் வந்த வருவேல்பிள்ளை, மூன்றாவது நாள் இறந்தார். படகில் இருந்த கயிற்றால், உடலை படகில் கட்டினோம். பிப்., 4 ல் மதியம் 2 மணிக்கு தூரத்தில் ஒரு இலங்கை படகு வந்தது. எங்களை கவனித்த படகில் வந்தவர்கள், அருகில் வந்து விசாரித்தனர். படகு உரிமையாளரிடம் அனுமதி பெற்று, எங்களை ஏற்றி கொண்டனர்.
ஐஸ் இல்லாததால், வருவேல்பிள்ளை உடலை, கடலில் படகுடன் விட்டு விட்டோம். இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட எங்களது உடலில் காயங்கள் இருந்ததால், நீர் கொழும்பு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். படகு உரிமையாளரின் மொபைல் போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தோம். பின்னர் மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால், தற்காலிக பாஸ்போர்ட் பெற்று, விமானத்தில் இலங்கையிலிருந்து மதுரை வந்தோம், என்றனர்.

No comments:
Post a Comment