Friday, February 8, 2013

எவ்வகையான இனவாத, மதவாத முறுகல் நிலை ஏற்படாதிருக்க தீவிர கண்காணிப்பு: அரசியல் தலைவர்கள், பொலிஸாருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்பு!

Friday, February 08, 2013
இலங்கை::எவ்வகையான இனவாத, மத வாத முறுகல் நிலைமையும் நாட்டில் எப்பகுதியிலும் இடம்பெறாதிருக்க தீவிரமாக கண்காணிக்குமாறு சகல அரசியல் தலைவர்களுக்கும், பொலிஸாருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார்.

இன, மத ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி அவர்கள் சகல சந்தர்ப்பங்களிலும் மதத் தலைவர்கள் அரசியல் தலைமைகளுடன் பேச்சு நடத்தி அவர்களது ஆலோசனைகளுடன் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார் என சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் போது முஸ்லிம்களுக்கும், பெளத்தர்களுக்கும் இடையே நாட்டில் ஆங்காங்கே கலவரங்கள் தலைதூக்க முற்பட்டதாகவும் இது தொடர்பில் அரசு கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

30 வருடங்களாக துன்பத்தை அனுபவித்த பின்னர் வென்றெடுத்த சமாதானத்தை பாதுகாத்துக் கொள்வதே எமது அரசின் முக்கிய நோக்கமாகும். தில் இனவாதத்தை மதவாத தீயை தூண்டும் எவ்வகையான செயற்பாடுகளுக்கும் எமது அரசிடமிருந்து ஆதரவு கிடைக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் நிமால் குறிப்பிட்டார்.

விசேடமாக இனவாத, மதவாததினால் பரவச் செய்வதற்காகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசை அபகீர்த்திக்கு உள்ளாக்குவதற்கும் அரசை கவிழ்ப்பதற்கும் எடுக்கும் சிலரது முயற்சிகளை சில சூழ்ச்சிக்காரர்களின் முயற்சிகளை சில எதிராளிகளை தோற்கடிப்பதற்காக அரசுக்கு பக்க பலமாக செயற்பட்டு வரும் முஸ்லிம் மக்களை அரசிடமிருந்து பிரிப்பதற்கு சில திட்டமிட்ட சூழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்த சூழ்ச்சிகளின் முக்கிய விடயமாக கட்டுக் கதைகள், வதந்திகள் பரப்பிவிடப்படுகின்றன. சில ஊடகங்கள் ஊடாகவும் இவ்வாறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதனை மக்கள் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

தற்போதைய நிலைமை உக்கிரம் அடைவதற்கு வதந்திகளே காரணம் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக வதந்திகளை பரப்பி விடுவதும் ஐ. தே. க.வின் புதிய பிரசார உத்தி என்று ஐ. தே. க. எம்.பி. சுகத் சந்திரசேகரவும் குறிப்பிட்டிருந்தார்.

இனவாத, மதவாத தீயை பரப்பி அரசை ஸ்திரமற்றதாக ஆக்குவதற்கு சில குழுக்கள் வதந்திகளை பரப்புகின்றன என்பதும் எதிர்க் கட்சித் தலைவரின் உரையிலிருந்து தெளிவாகிறது.

எனவே வதந்திகளை பரப்புவதால் ஏற்படும் பயங்கர விளைவுகளை கருத்தில் கொண்டு வதந்திகளை பரப்புவதை விடுத்து நேர்மையான அரசியலை நடத்த ஐ. தே. க. முன்வர வேண்டும்.

எதிர்க் கட்சித் தலைவர் 10 முஸ்லிம் வணக்கஸ்தலங்கள் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதனை நாம் முழுமையாக மறுக்கிறோம்.

நாட்டில் சில இடங்களில் ஏற்பட்ட சில எதிர்ப்பு நடவடிக்கைகளை முற்றுமுழுதாக பெரிதுபடுத்தி முஸ்லிம் வணக்கஸ்தலங்கள் தாக்கப்பட்டதாக கூறுவது முற்றிலும் தவறானது. எந்த முஸ்லிம் வணக்கஸ்தலத்துக்கு தாக்குதல் நடத்தப்பட்டது என்பது பற்றி அவர் இந்த சபைக்கு தெரிவிக்க வேண்டும்.

இது தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின் படி இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றதாக இல்லை.

அரசில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் அமைச்சர்கள், உறுப்பினர்கள் இப்பிரச்சினைகள் தொடர்பாக சகல சந்தர்ப்பங்களிலும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வருவதுடன் பேச்சு நடத்தி இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமலிருப்பதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கியிருக்கிறார்கள்.

இவ்விடயங்கள் தொடர்பாக விரிவாக பேச்சு நடத்துவதற்கு ஆராய்வதற்கு அதனூடாக பரிந்துரைகள் செய்வதற்கு அரசின் நியமிக்கவிருக்கும் தெரிவுக் குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இவரது இந்த கூற்றின் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்பது தான் அவரது நிலைப்பாடா? என்றும் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறான ஒரு தெரிவுக்குழுவுக்கு ஆதரவு வழங்குவதன் மூலமே பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்றும் அமைச்சர் நிமால் தெரிவித்தார்.

No comments:

Post a Comment