Friday, February 01, 2013
பட்டுக்கோட்டை::நாகை மற்றும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நாகை, ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர் பைசல்கான். இவருக்கு சொந்தமான படகில் ஜெகதா பட்டிணத்தை சேர்ந்த கணேசன், பூவரசன், முருகன் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை சேர்ந்த தங்கராசு ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் மல்லிப்பட்டிணத்தில் இருந்து 25 மைல்கல் தொலைவில் இந்திய எல்லையில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படை கப்பல் வந்தது. அதில் இருந்த இலங்கை கடற்படை வீரர்கள் ஜெகதாபட்டிணம் மீனவர்களை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினார்கள்.
மேலும் மீனவர்கள் தங்களது படகில் வைத்திருந்த சாப்பாடு, மீன், வலை ஆகியவற்றை பிடுங்கி கடலுக்குள் வீசினர். இதன் மதிப்பு ரூ. 2 1/2 லட்சம் ஆகும். மேலும் மீனவர்களின் லைசென்சு, படகின் உரிம கார்டுகளையும் இலங்கை கடற்படையினர் பறித்து சென்றனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த 4 மீனவர்களும் படுகாயத்துடன் இன்று காலை அதிராம்பட்டினம் திரும்பினார்கள். அங்குள்ள கடலோர காவல்படையினரிடம் தாங்கள் தாக்கப்பட்டது குறித்து புகார் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் 4 பேரும் இன்று காலை கரை திரும்பினர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கணேசன் (33), பூவரசன் (45), தங்கராஜ் (43), முருகன் (47). இவர்கள் 4 பேரும் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் முகாமிட்டு மீன் பிடித்து வருகின்றனர். சேக்தாவூது என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் இவர்கள் கடந்த 29-ம் தேதி கடலுக்கு சென்றனர். 2 நாள் கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று பிற்பகல் கரை திரும்ப தயாராக இருந்தனர்.

No comments:
Post a Comment