Monday, February 04, 2013
குன்னூர்::நீலகிரியில் பேய், ஆவி பீதியை போக்க, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பேய், பிசாசு, ஆவி போல மேக்கப் அணிந்தவர்கள் கல்லறைகளில் இருந்து திடீர் திடீரென எழுந்து வந்து மக்களை மிரட்டி, விழிப்புணர்வு அளித்தனர். நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த வன பகுதிகள், தேயிலைத் தோட்டங்கள் அதிகம் உள்ளன. இப்பகுதிகளில் பேய், ஆவி பீதி சமீபகாலமாக தலைவிரித்து ஆடுகிறது. ‘‘ஆள்நடமாட்டம் குறைவான காட்டு பகுதிகள், டீ எஸ்டேட்களில் ஆவிகள் நிறைய உலா வருகின்றன. மலையில் இருந்து குதித்தும் விஷம் குடித்தும் தற்கொலை செய்துகொண்டவர்கள், விபத்தில் அகால மரணம் அடைந்தவர்கள், கொலை செய்யப்பட்டவர்களின் ஆவிகள் இப்பகுதியில் பரவலாக நடமாடுகின்றன.
இறந்த இடத்திலேயே சுத்திச் சுத்தி வரும் இந்த ஆவிகள் தங்களது உறவினர்களையும் நண்பர்களையும் பிடித்து ஆட்டுகின்றன..’’ என்று ஆளாளுக்கு பீதி கிளப்பி வருகின்றனர். இதனால், இரவில் வீட்டை விட்டு வெளியே வர மக்கள் பயப்படுகின்றனர். பெண்களும் குழந்தைகளும் தனியே வெளியே வருவதை தவிர்க்கின்றனர். சில கிராமங்களில் பிள்ளைகளை விளையாடக் கூட அனுப்புவதில்லை. இந்நிலையில் பேய், ஆவி என்பதெல்லாம் மூட நம்பிக்கை என்பதை விளக்கும் வகையில் நீலகிரி மாவட்ட கலை குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
குன்னூரில் உள்ள மயானத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தி காட்டினர். பேய், ஆவிகள் போல முகமூடி அணிந்தும் உடல் முழுவதும் வெள்ளை ஆடை அணிந்தும் கல்லறைகளுக்கு நடுவில் இருந்து திடீர் திடீரென வெளியே வந்தனர். மிரண்டு ஓடிய மக்கள் முன்னிலையில் தங்களது முகமூடியை அகற்றி, ‘நாங்கள் பேய், பிசாசு அல்ல. உங்களை போல சாதாரண மக்கள்தான்’ என்பதை விளக்கினர். ‘பேய், ஆவி இருந்தால் கூட மனிதர்களை கண்டுதான் பயப்படும்’ என்பதை விளக்கியும் நடித்து காட்டினர். அவர்கள் செய்துகாட்டியது நம்பிக்கையை ஏற்படுத்தி தெம்பூட்டும் விதமாக இருந்தது என்று மக்கள் கூறினர். விழிப்புணர்வு குழுவில் உள்ள பலர் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment