Thursday, February 07, 2013
தஞ்சாவூர்::மதுரை ஆதீனம் அருண கிரிநாத ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இலங்கை அதிபர் ராஜபக்சேவை எந்த காரணத்தை முன்னிட்டும் இந்தியாவிற்குள் வர அனுமதிக்கக்கூடாது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த அவரை இந்தியாவிற்கு அழைப்பது தமிழர்களுக்கு செய்யும் தீங்காகும். துரோகமாகும். இப்போது கூட அங்கு (இலங்கை) தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. தமிழர்களுக்கு துரோகம் செய்த ராஜபக்சே திருப்பதிக்கு வருவது நல்லது அல்ல.
இலங்கையில் நூற்றுக்கணக்கான இந்து கோவில்களை இடித்த ராஜபக்சே மனசாட்சிக்கு விரோதமாக இந்தியாவிற்கு வருவதை வரவேற்பதையும், அவரை தரிசனம் செய்ய அனுமதிப்பதையும் தமிழர்கள் மனது ஏற்றுக் கொள்ளாது. ஆண்டவன் கூட ஏற்றுக் கொள்ளமாட்டார்.
ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். காவிரி பிரச்சினையில் மிக சிறப்பான வகையில் சரியான நடவடிக்கை எடுத்த முதல் அமைச்சரை பாராட்டுகிறேன். திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், கலைஞர்களை நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் நல்ல படத்தை எடுங்கள். எந்த சமய நம்பிக்கையையும் பாதிக்கும் வகையில் எந்த படத்தையும் எடுக்க வேண்டாம். இதனால் எந்த பிரச்சினையும் ஏற்படக்கூடாது.
விஸ்வரூபம் படத்தால் பெரிய பிரச்சினை ஏற்பட்டது. ஆதிபகவான் படத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாக அறிந்தேன். மதுரை ஆதீனத்திற்கு இளையஆதீனமாக யாரையும் இப்போதைக்கு நியமிக்கவில்லை. அதற்கு காலம் இருக்கிறது. உங்களுக்கு தெரியாமல் இளையஆதீனத்தை அறிவிக்கமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.




No comments:
Post a Comment