Tuesday, February 5, 2013

இந்தியாவிடம் சீனா உறுதி : பிரம்மபுத்ரா குறுக்கே அணை கட்டுவதால் ஆபத்து வராது!

Tuesday, February 05, 2013
பீஜிங்::பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே அணை கட்டுவதால், வடகிழக்கு மாநில மக்களுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ பாதிப்பு ஏற்படாது என்று இந்திய அரசிடம் சீனா உறுதி அளித்துள்ளது. சீனாவின் அண்டை நாடுகளுடன் நதிநீர் பங்கீடு விஷயத்தில் பல ஆண்டுகளாக பிரச்னை நிலவுகிறது. அண்டை நாடுகளுக்கு தகவல் சொல்லாமல் திடீரென நீர்மின் திட்டங்களை சீனா செயல்படுத்தி வருவதாக இந்தியா உள்பட பல நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஜின்ஜியாங் மாகாணத்தில் அணை கட்டுவது குறித்து தங்களிடம் எதுவும் சொல்லவில்லை. இதனால் இர்டிஷ் மற்றும் இலி நதிநீர் வரத்து குறைந்து விட்டது என்று கசகஸ்தான் குற்றம் சாட்டியது. இதேபோல் மெகாங் பகுதியில் சீனா அணை கட்டியுள்ளதால் தாய்லாந்து, வியட்னாம், கம்போடியா போன்ற நாடுகளும் அச்சத்தில் உள்ளன. இந்த பிரச்னை பெரிதான பிறகு, தற்போது நதிநீர் குறித்த தகவல்களை இந்த நாடுகளுடன் சீன அரசு பரிமாறி வருகிறது. இந்நிலையில் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே 3 அணைகள் கட்ட சீனா திட்டமிட்டுள்ளது.

இதனால் இந்தியாவின் வடகிழக்கு மாநில மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த டிசம்பர் மாதம் மத்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் சீன பயணம் மேற்கொண்டு, அணை பிரச்னை தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே அணை கட்டுவதால், வடகிழக்கு மாநில மக்களுக்கோ சுற்றுச்சூழலுக்கோ பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ளப்படும். மேலும் அணை கட்டுவதால் இந்தியாவுக்கு பிரம்மபுத்ரா நதிநீர் கிடைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது என்று சீன அரசு தெரிவித்துள்ளது. இந்த நதியில் இருந்து எவ்வளவு நீர் இந்திய பகுதிக்குள் பாய்கிறது என்பது போன்ற விவரங்களை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்துதான் திட்டம் அமல்படுத்தப்படும். இதுகுறித்து இந்திய அரசின் ஒத்துழைப்பையும் தகவல்களையும் பரிமாறி வருகிறோம் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறினார்.

No comments:

Post a Comment