Tuesday, February 12, 2013

புலிகள் தொடர்ந்தும் போராட்டத்தை தொடர்வதற்கு முயற்சித்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்!

Tuesday, February 12, 2013
இலங்கை::புலிகள் தொடர்ந்தும் போராட்டத்தை தொடர்வதற்கு முயற்சித்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் கடக்கவுள்ள நிலையிலும் புலிகளின் எஞ்சிய உறுப்பினர்கள் தொடர்ந்தும் பிரிவினைவாதத்தை தொடர்வில் ஆர்வம் காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் காரணமாகவே அரசாங்கம் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் அரசாங்கம் இணக்கப்பாடுகளை ஏற்படு;த்திக்கொள்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

லக்ஸ்மன் கதிர்காமர் சர்வதேச விவகார நிறுவகத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் - இலங்கை கூட்டு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மனிதாபிமான மீட்புப் பணிகளின் போது  புலிகளின் ஒரு பகுதியினர் இல்லாதொழிக்கப்பட்ட போதிலும், ஒரு பகுதி புலி உறுப்பினர்களே இவ்வாறு இல்லாதொழிக்கப்பட்டுள்ளனர் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஒரு தொகுதியினர் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் எஞ்சிய பிரிவினர் தொடர்ந்தும் பிரிவினைவாத யுத்தத்தை தொடர முயற்சிப்பார்கள் என்பதில் ஐயமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அச்சுறுத்தலை வெற்றிகரமாக முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இதன் காரணமாகவே தேசியப் பாதுகாப்பு விவகாரங்களில் அரசாங்கம் எந்தவிதமான நெகிழ்வுத் தன்மையையும் காட்டுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்ட காலமாக யுத்தம் இடம்பெற்ற இலங்கை போன்ற நாடுகளில் ஒரே இரவில் அனைத்து விடயங்களும் வழமைக்கு திரும்பிவிட்டதாக கருதுவது முட்டாள்தனமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முடிந்தளவு தளர்த்துவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக முயற்சிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். சமாதானத்தின் ஒட்டுமொத்த சலுகைகளையும் மக்களுக்கு வழங்க முயற்சிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு முரண்பாட்டு நிலைமைகளுக்கும் காத்திரமான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். நவீன தொழில்நுட்ப முறைமைகளை பயன்படுத்தி குறிப்பாக இணையத்தைப் பயன்படுத்தி  புலிகள் மீள ஒருங்கிணையக் கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகளுடனான உறவுகளின் போது மனித உரிமை என்ற விடயம் மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த சில தசாப்தங்களில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய இலங்கைத் தமிழர்கள் அந்நாடுகளில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்களில் புலி ஆதரவாளர்களும் வாழ்ந்து வருவதனால், மனிதாபிமான மீட்புப் பணிகள் தொடர்பில் பிழையான தகவல்கள் அந்தந்த நாட்டு அரசாங்கங்களுக்கு வழங்கப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார், வெளிநாடுகளில்  புலி ஆதரவாளர்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களை முறியடிப்பதே அரசாங்கத்தின் பிரதான சவாலாக அமைந்துள்ளது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment