Tuesday, February 12, 2013
இலங்கை::வழமையாக இலங்கைத் தமிழர்களுக்காக (புலிகளுக்காக) காவடி தூக்கும் தமிழகக் கதாநாயகர்களும் இலங்கைத் துணை நடிகரும்!
அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட விஜயமாக இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள பௌத்தர்களின் புத்தகாய புனிதஸ்தலத்திற்கும், பின்னர் ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி வெங்கடேஸ்வர தேவஸ்தானத்திற்கும் தனது பாரியார் சகிதம் சென்று வழிபாடு செய்து திரும்பியிருக்கிறார்.
அவரது இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்திலுள்ள இரண்டு கட்சிகள் - அதாவது தி.மு.க, ம.தி.மு.க என்பன - எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. தமிழகத்திலுள்ள ஏனைய பிரதான கட்சிகளான அ.இ.அ.தி.மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்பன எந்தவிதமான மலினமான 'தெருக்கூத்துகளிலும்’ ஈடுபடவில்லை.
வழமையாக இலங்கைத் தமிழர்களுக்காக காவடி தூக்கும் , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, தா.பாண்டியன், தொல்.திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி போன்றவர்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன,,, ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி இம்முறை ராஜபக்சவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் எதிலும் ஈடுபடவில்லை.
தமிழகத்தில் மட்டும் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவது ஒன்றும் புதுமையானவை அல்ல. வழமையானவைதான். ‘தொப்புள் கொடி உறவு’ காரணமாகத்தான் இந்தத் தமிழகக் கட்சிகள் இலங்கை அரசுக்கு எதிராகவும், அங்குள்ள தமிழர்களுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் செய்வதாகச் சொல்லிக் கொண்டாலும், இந்தக் கட்சிகளுக்கிடையில் காலங்காலமாக நடைபெற்று வரும் குடுமிபிடிச் சண்டையும், அவர்கள் இலங்கைத் தமிழர்களை வைத்து அரசியல் பிழைப்பு நடாத்துவதும்தான், அவர்களது மார் தட்டுகைகளுக்குக் காரணம் என்பதை சிறு பிள்ளையும் அறியும்.
இவர்களுக்கு தமிழகத்தில் செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்கிறது. தமிழக மக்களில் அரைவாசிப் பேருக்கு மேல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. தொடர்ச்சியான மின்சார வெட்டால் அனைத்து மக்களது வாழ்க்கையும் சீரழிந்து போயுள்ளது. தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடுகின்றது. பெண்கள் மீதான வன்முறை, ரவுடிகளின் அட்டகாசம், கூலிக்கு கொலை செய்பவர்களின் கொட்டம், கலாச்சாரச் சீரழிவு, அந்நிய வர்த்தகக் கம்பனிகளின் ஏகபோகக் கொள்ளை, விவசாயிகளின் நீர்ப்பிரச்சினை, லஞ்சம், ஊழல் என தமிழகம் சாக்கடையாக முடை நாற்றம் எடுக்கிறது.
இவை எல்லாம் பற்றி இந்தத் தமிழகக் கட்சிகளுக்கு எவ்விதமான அக்கறையும் கிடையாது. இந்த மாதிரியான விடயங்களில் 10 வீதத்தைக்கூட அனுபவிக்காத இலங்கைத் தமிழர்களுக்காக இவர்கள் நீலிக்கண்ணீர் வடிப்பது வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கிறது. இவர்கள் உண்மையில் இலங்கைத் தமிழர்களுக்காக அக்கறைப்படுபவர்களாக இருந்தால் செய்திருக்க வேண்டிய வேலைகள் ஏராளம் இருந்தது.
1987இல் இந்திய - இலங்கை ஒப்பந்தம் எழுதப்பட்டு, இலங்கைத் தமிழர்களுக்கு வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண ஆட்சி கிடைத்தபோது, அதைப் புலிகள் பிரேமதாச அரசுடன் சேர்ந்து நின்று செயல்படாமல் செய்தார்கள், இந்திய அமைதிப்படையுடன் போர் புரிந்து சுமார் 2,500 இந்திய வீரர்கள் வரை கொன்றார்கள். பின்னர் தமிழக மண்ணில் வைத்தே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை மனித வெடி குண்டு மூலம் கொலை செய்தார்கள். தமிழர்களுக்கு எதிரான புலிகளின் இந்த நாச வேலைகளை எல்லாம், இந்தத் தமிழகக் கட்சிகள் ஏகோபித்துக் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை.
2000ஆம் ஆண்டில் அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமிழ் பிரதேசங்களை ஒன்றிணைத்து, தமிழ் மக்களுக்கு சுயாட்சி அடிப்படையிலான தீர்வு ஒன்றை முன்மொழிந்தார். அந்தத் தீர்வைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றவிடாமல், சிங்கள இனவாதக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி என்பனவற்றுடன் சேர்ந்து, புலிகளால் வழிநடாத்தப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியும் எதிர்த்து முறியடித்தது. அதன்காரணமாக வரலாற்றில் தமிழர்களுக்குக் கிடைத்த அந்தப் பொன்னான சந்தர்ப்பம் நழுவிப்போனது. இந்த தமிழர் விரோத செயலுக்காக தமிழக கட்சிகள் புலிகளையும், தமிழர் விடுதலைக் கூட்டணியையும் கண்டித்தார்களா? இல்லவே இல்லை.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானதும் புலிகளைச் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்தார். புலிகள் அதை உதாசீனம் செய்துவிட்டு. போருக்குப் போனார்கள். அது இறுதியில் 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் புலிகளின் இறுதி அழிவுடன் முற்றுப் பெற்றது. புலிகள் தாமும் அழிந்ததுமல்லாமல், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களையும் தமது பாதுகாப்புக் கேடயமாக வைத்திருந்து, அந்த அப்பாவி மக்களையும் அழிவுக்குள்ளாக்கினார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் இனியும் போரிடுவது தமிழ் மக்களுக்கும் புலிகளுக்கும் அழிவைக் கொண்டு வரும் என, புலிகளுக்கு எடுத்துச் சொல்லி, புலிகள் தமது பாதுகாப்புக்காகப் பிடித்து வைத்திருக்கும் மக்களை விடுவிக்கும்படி இந்தத் தமிழகத் தலைவர்கள் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யாமல், போரை மேலும் மேலும் தூண்டி மக்களுக்கு அழிவு ஏற்படக் காரணமானார்கள். (அதற்காக அவர்களும் போர்க் குற்றவாளிகளாக விசாரிக்கப்பட வேண்டும்)
புலிகள் தமது 30 வருடப் போர் வரலாற்றில் பெறுமதி வாய்ந்த தமிழ் தலைவர்கள், அறிஞர்கள், பல்துறை விற்பன்னர்கள் உட்பட சுமார் 30,000 ஆயிரம் தமிழ் மக்களைக் கொலை செய்துள்ளார்கள். இந்தக் கொலைக் கலாச்சாரத்தைத் தமிழகத் தலைவர்கள் என்றாவது கண்டித்தது உண்டா? புலிகளின் இந்த இழிவான, மனித விரோதச் செயல்களையெல்லாம், ‘வீரதீரச் செயல்கள்’ எனத் தமிழகக் கட்சிகள் புகழ்ந்திருக்கின்றன. இவைதானா இலங்கைத் தமிழர்களுடனான தொப்புள்கொடி உறவு? இல்லைவே இல்லை!
எல்லோருக்கும் தெரியும், அன்றும் சரி, இன்றும் சரி, இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகப் பிழைப்புவாதக் கட்சிகளும், அவற்றின் கோமாளித் தலைவர்களும் சிந்தும் ‘கிளிசரின் கண்ணீர்’, புலிகளின் சர்வதேசப் பினாமிகள் மாதாமாதம் வழங்கும் பணக் கொடுப்பனவுகளுக்காகத்தான் என்பதை. வேண்டுமானால் புலிப் பினாமிகள் ஒருமாதம் இந்தத் தமிழகப் பிழைப்புவாதிகளுக்குப் பணப் பட்டுவாடாவை நிறுத்திப் பார்க்கட்டும். அதன் பின்னர் தமிழகத்தில் இலங்கைத் தமிழகர்களுக்காக ஒரு நாயாவது குரைக்கிறதா என்பதை!
இன்னொரு விடயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும். இலங்கை அரசுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் தமிழகத்திலுள்ள சில பிழைப்புவாதக் கட்சிகளால் மட்டுமே நடாத்தப்படுகின்றன. இதர தென் மாநிலங்களான கேரளாவிலோ, ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ இவை ஏன் இல்லை? அல்லது குஜாராத்தலோ, உத்தரப்பிரதேசத்திலோ, மேற்கு வங்கத்திலோ அல்லது பஞ்சாப்பிலோ ஏன் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவில்லை? அந்த மாநில அரசுகளும் மக்களும் இலங்கை மக்களுடனும், இலங்கை அரசுடனும் நட்பு பாராட்டவே விரும்புகின்றனர். அங்கு யாருக்கும் புலிகளின் பணப் பட்டுவாடா இல்லாதபடியால், கூலிக்கு மாரடிக்கும் கூட்டமும் அங்கு இல்லை. அதுதான் உண்மை.
அண்மையில்கூட, ஜனாதிபதி ராஜபக்ச பீகார், ஆந்திர மாநிலங்களுக்குச் சென்றபோது, தமிழகத்திலிருந்து கூலிக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களே அங்கு சென்று அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அந்த மாநிலங்களிலுள்ள ஏதாவது ஒரு அரசியல் கட்சியோ அல்லது பொதுமக்களோ எவ்விதமான ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடவில்லை. அதுமட்டுமல்லாமல், அந்த மாநில அரசுகள் மத்திய அரசுடன் இணைந்து ராஜபக்சவுக்குப் போதிய பாதுகாப்பும், உரிய கௌரவமம் வழங்கிப் பெருந்தன்மையாக நடந்து கொண்டன.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கூத்துக்கு மத்தியில் ஒரு கோமாளி தோன்றுவது போல, கொழும்பிலிருந்து ஒருவர் நாளாந்தம் இலங்கை அரசுக்கு எதிராக அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல. ஐ.தே.கவின் செல்லப் பிள்ளையாக இருந்து முதலில் அரசியல் செய்து, அது எடுபடாது என்று கண்டவுடன், பின்னர் ‘மேலக மக்கள் முன்னணி’ என்ற பெயரில் கொழும்புத் தமிழர்களின் வாக்குகளை அள்ள முயற்சி செய்து, பின்னர் எல்லா தமிழர்களுக்கும் தான்தான் ஆபத்பாந்தவன் போல, ‘ஜனநாயக மக்கள் முன்னணி’ என்ற பெயரில் தற்பொழுது கடை விரித்திருக்கும் மனோ கணேசன் என்பவர். இவரது தமிழர்கள் மீதான பற்றுதல் எவ்வளது தூரம் என்றால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் ஒரு கிளையையும், காரியாலயத்தையும் நிறுவியபோது, கொழும்பு தனது ஆதிக்கத்திலுள்ள இடம் என்பது போல, கூட்டமைப்புக்கு அங்கு என்ன வேலை எனக் கண்டனம் முழங்கியவர்.
அவர் என்னதான் காலத்துக்காலம் வேசங்களை மாற்றினாலும், எப்படி முதுகில் உள்ள கோட்டை அழிக்க முடியாதோ, அதேபோல அவரது முதுகில் எழுதியுள்ள எழுதிய ‘ஐ.தே.க கட்சிக்காரர்’ என்ற நாமம் ஒருபோதும் அழியாது. அவரே ஒருமுறை தன் வாயால் அதை ருசுப்படுத்தியும் இருக்கிறார். அவர் ஐ.தே.க கட்சி மீது ஒருமுறை போலியான விமர்சனம் ஒன்றை வைக்கப்போய் அது விவகாரமாகச் சிலரால் கிளப்பப்பட்ட போது, ‘என் விரலால் என் கண்ணைக் குத்துவேனா?’ என அவர் தனது ஐ.தே.க விசுவாசத்தை வெளிப்படுத்திய சம்பவத்தைப் பலர் மறந்திருக்கமாட்டார்கள்.
இந்த மனோ கணேசன் தினசரி கட்டுக் கட்டாக அறிக்கைகளைத் தயாரித்து விடுவதற்கென்றே, ஊடகக் காரியாலயம் (Media Office) ஒன்றையும் வைத்திருக்கிறார். அந்தக் காரியாலயத்திலிருந்து வந்திருக்கும் பிந்திய அறிக்கையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தமிழகத்தில் வெளிப்படுத்திய எதிர்ப்புக்கு வக்காலத்து வாங்கியுள்ளதுடன், தான் ஒரு தமிழக அரசியல்வாதியாக இருந்தால் அதைத்தான் செய்திருப்பேன் எனவும், தனது ‘தேசபக்தி’யை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், தமிழகப் பிழைப்புவாதிகள் செய்வது சரியென்றும், இலங்கை அரசுதான் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் புத்திமதி வேறு! அது போதாதென்று, தற்போதைய ஆர்ப்பாட்டம் ஒரு தொடக்கம்தான் என்றும், இனிமேல்தான் பாரதூரமான போராட்டம் வெடிக்கப் போகின்றதென்றும், தான்தான் இலங்கை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்பவர் என்ற கணக்கில் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். அவரது இந்த அறிக்கைக்காகவே அவரை இலங்கை அரசால்; கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தச் சட்டத்தில் இடமுண்டு. ஆனால் அதீத ஜனநாயகத்தை இம்மாதிரியானவர்கள் விடயத்தில் வழங்கும் இலங்கை அரசின் கையாலாகாத்தனம் அதற்கு இடம் கொடுக்காது!
மனோ கணேசன் போன்ற இலங்கைப் பிழைப்புவாத அரசியல்வாதிகளுக்கு, தமிழக அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஏன் நாடகம் போடுகிறார்கள் என்பது தெரியாததல்ல. தெரிந்து கொண்டே, வேண்டுமென்றே தினமும் தனது ஊடகக் காரியாலயம் மூலம் பொய்களைப் பரப்புவது அவரது வேலையாக இருக்கிறது. அவர் தொழில்ரீதியாக ஒரு வியாபாரி என்றபடியால், பெரும் பணத்தை ஊடகவியலாளர்களுக்குச் செலவு செய்து தனது அறிக்கைகளுக்குப் பிரபல்யம் தேடிக்கொள்ள முடிகிறது. ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால், அதை உண்மையாக்கலாம் என்பதில் அசையாத நம்பிக்கை அவருக்கு இருப்பது போலத் தோன்றுகிறது.
ஆனால் இந்த மனோ கணேசனும் தமிழக அரசியல்வாதிகள் போல, புலிகள் தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்த கொடூரங்கள் பற்றி ஒருபோதும் வாய் திறக்கமாட்டார். அவரது விசுவாசத்துக்குரிய ஐ.தே.க சாதாரண நிலையிலிருந்த இலங்கையின் இனப் பிரச்சினையை யுத்தமாக மாற்றியது குறித்தோ, அக்கட்சியின் ‘புகழ்மிக்க’ ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆர்.பிரேமதாச ஆகியோரின் 17 வருட ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடாத்தின இன வன்செயல்கள் குறித்தோ, அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்த பின் வகை தொகையில்லாமல் தமிழ்ப் பிரதேசங்களில் குண்டுமாரி பொழிந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தது பற்றியோ வாய் திறக்கமாட்டார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில்கூட, மனோ கணேசன் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து, இவர்கள் கூறும் இறுதிப் போரின் போது தமிழ் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த அரச படைகளின் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்குத்தான் ஆதரவாகத்தான் வேலை செய்தார்கள் என்றால், இவர்கள் தமிழ் மக்களுக்காகப் போடும் கூப்பாடு இதய சுத்தியுடனானதா என்ற கேள்வி எழுவதில் நியாயமுண்டு. இந்த பொன்சேகா ஒன்றும் தமிழ் மக்களை உய்விக்க அவதாரம் எடுத்து வந்தவரல்ல. அவர் முன்னதாக கனடிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், ‘இலங்கையில் தமிழர்கள் வேண்டுமானால் இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் அவர்கள் அங்கு உரிமை கிரிமை என்றெல்லாம் கோரக்கூடாது’ என பேரினவாத அகங்காரத்துடன் கூறியவர்தான்!
எனவே மனோ கணேசன் போன்றவர்கள் என்னதான் ஆயிரம் தரம் தடவைகள் ஸ்நானம் செய்தாலும், அவர் ஒரு ஐ.தே.க பினாமி என அவர் மீது பூசப்பட்டுள்ள கரியை அழித்து, அவர் தன்னை ஒருபோதும் வெள்ளையாக்க முடியாது. அவர் எவ்வளவுதான் பணக்காரராக இருந்தாலும், அந்தப் பணத்தைக் கொண்டும், தந்திர மந்திரங்களைக் கொண்டும் தமிழ் மக்களை ஏமாற்றவோ, அவர்களது மனங்களை வெல்லவும் முடியாது.
வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)






No comments:
Post a Comment