Monday, February 04, 2013
திண்டுக்கல்::திண்டுக்கல்லை சேர்ந்த அகதிகளை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து செல்வதாக கூறி ரூ.5.80 லட்சத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி, நடுக்கடலில் தவிக்க விட்டு சென்றவர் சென்னை போலீசாரிடம் சிக்கினார்.
திண்டுக்கல் அடியனூத்து அகதிகள் முகாமை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரிடம் சென்னை குடில் அகதிகள் முகாமை சேர்ந்த அருள்ராஜ்,40, "நான் உங்கள் குழுவினரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்கிறேன். அங்கு உடனே குடியுரிமை வழங்குவர்,' என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய பாஸ்கரன், திண்டுக்கல் முகாமை சேர்ந்த தனது நண்பர்களான திருகுமரன், பரசந்துலு, கிறிஸ்துராஜா, சண்முகராஜா, பேரின்பராஜா ஆகியோருடன் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டார். இதற்கு ஆறுபேரும் சேர்ந்து ரூ. 5 .80 லட்சத்தை அருள்ராஜிடம், 10.11.2012ல் கொடுத்துள்ளனர். இதற்கு அருள்ராஜ், அனைவரும் நாகபட்டினம் கடற்கரையில் இருந்து கள்ளத்தோணியில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று விடலாம் என்று கூறியுள்ளார்.
கடந்த 15.11.2012 ல் இவர்கள் ஆறுபேரும் நாகபட்டினம் சென்றுள்ளனர். இவர்களை தோணியில் ஏற்றி சென்றவர்கள் இரண்டு நாட்கள் கடலிலேயே சுற்றியுள்ளனர். ஆஸ்திரேலியா செல்வதற்கான சிக்னல் கிடைக்கவில்லை. இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் என கூறி மீண்டும் நாகப்பட்டினம் அருகே, கடலில் தோணியை நிறுத்தி விட்டு, காணாமல் போய்விட்டனர். பணத்தை கொடுங்கள், இல்லாவிட்டால் ஆஸ்திரேலியா அழைத்து செல்லுங்கள் என பல முறை திண்டுக்கல் அகதிகள் கேட்டும், அருள்ராஜ் பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி வந்துள்ளார். பாஸ்கரன் கொடுத்த புகாரில், திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், சென்னை போலீசார் அகதி அருள்ராஜை கைது செய்துள்ளனர். திண்டுக்கல் போலீசார் அருள்ராஜை திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணை செய்ய உள்ளனர்.

No comments:
Post a Comment